Ad Code

Responsive Advertisement

தரத்தை உறுதிப்படுத்த கல்லூரிகளில் திடீர் ஆய்வு: அண்ணா பல்கலை. முடிவு

கல்வித் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான சுற்றறிக்கையை அனைத்துக் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகம் அண்மையில் அனுப்பியுள்ளது. விதிப்படி, கல்லூரிகளில் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதோடு முழுமையான ஆய்வகம், வகுப்பறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளும் இடம்பெற்றிருக்க வேண்டும்.

பொறியியல் கல்லூரிகளில் இதுபோன்ற உள்கட்டமைப்பு வசதிகள் முழுமை பெற்றிருக்கின்றனவா என்பதை கல்லூரிகள் இணைப்பு அந்தஸ்து கோரி விண்ணப்பிக்கும்போது அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு செய்து வழக்கம்.

ஆனால், சில கல்லூரிகளில் இதுபோன்ற பல்கலைக்கழக ஆய்வின்போது மட்டும் வாடகைப் பேராசிரியர்களைப் பணியமர்த்தி கணக்குக் காட்டிவிட்டு, ஆய்வு முடிந்த பின்னர் அவர்களை அனுப்பிவிடுவது தொடர்கதையாகி வந்தது.

இதைத் தடுக்கும் வகையில், இணைப்புக் கல்லூரிகள், தங்களிடம் பணிபுரியும் அனைத்து பேராசிரியர்களின் விவரங்களை அவர்களின் புகைப்படத்துடன் கல்லூரி இணையதளத்தில் வெளியிடவேண்டும் என்ற புதிய நடைமுறையை பல்கலைக்கழகம் கொண்டுவந்தது.

ஆனால், இந்த நடைமுறையை பெரும்பாலான கல்லூரிகள் பின்பற்றவில்லை. இந்த நிலையில், உள்கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்தும் வகையில் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ளும் முடிவை பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜாராம் கூறியது:

பொறியியல் கல்லூரிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், உள்கட்டமைப்பு வசதிகள் முழுமை பெற்றிருப்பதை உறுதி செய்யவும் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக, இணைப்புக் கல்லூரிகள் அனைத்துக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது. ஆனால், எந்தெந்த கல்லூரிகளுக்கு எப்போது ஆய்வுக் குழு வரும் என்பது தெரிவிக்கப்படாது.

கல்லூரிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக தேர்வு செய்யப்பட்டு திடீர் ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வின்போது 1:15 என்ற விகிதத்தில் பேராசிரியர்கள் இடம்பெற்றுள்ளனரா, அவர்களின் கல்வித் தகுதி, உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை ஆய்வு செய்யப்படும். இதில் குறைபாடு உள்ள கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement