Ad Code

Responsive Advertisement

350 டன் பாட புத்தகங்கள் பழைய பேப்பர் கடையில் விற்பனை: கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி புகார் - கல்வி அலுவலக ஊழியர் கைது

கோவை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம் கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி ஒரு புகார் மனு அளித்தார். அதில் கோவை மாவட்டத்துக்கு வழங்கப்பட்ட பாடப் புத்தகங்களை கோவை புலியகுளத்தில் உள்ள ஒரு பள்ளியிலும், ஒண்டிப்புதூரில் உள்ள ஒரு பள்ளியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அந்த புத்தகங்களில் சுமார் 350 டன் புத்தகங்கள் மாயமானது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக முன்னாள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

இதில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த புகார் மீது உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மரியமுத்துவுக்கு போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மரியமுத்து விசாரணை நடத்தினார். விசாரணையில் புத்தகங்கள் மாயமான வழக்கில் முன்னாள் கல்வி அதிகாரி ராஜேந்திரன், இணை ஆய்வாளர் பிரின்ஸ் சாலமன், புலியகுளம் பள்ளி தலைமை ஆசிரியர் லூர்து சேது, இணை பள்ளி ஆய்வாளர் அருள் ஜோதி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக உதவியாளர் சரவணக்குமார், சிறப்பு அதிகாரி கார்த்திகேயன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

அவர்கள் குறித்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். தகவலறிந்ததும் வழக்கில் தொடர்புடையவர்கள் தலைமறைவானார்கள். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு கோவை ரேஸ்கோர்ஸ் அரசு குடியிருப்பு வளாகத்தில் குடியிருந்து வரும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக உதவியாளர் சரவணக்குமார் கைது செய்யப்பட்டார்.

அவரை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அவர் போலீசாரிடம் கூறும்போது ஒண்டிப்புதூரில் உள்ள ஒரு பள்ளியிலும், புலியகுளத்தில் உள்ள ஒரு பள்ளியிலும் வைத்திருந்த மாயமான புத்தகங்களை கோவை சிங்காநல்லூரில் உள்ள பழைய பேப்பர் மற்றும் இரும்பு கடையில் ரூ.4½ லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தோம் என்றார்.

இந்த புத்தகங்களை எப்படி பள்ளியில் இருந்து எடுத்து சென்றனர்? புத்தகங்களை வாங்கிய பழைய பேப்பர் வியாபாரி யார்? இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

இத்துடன் தலைமறைவான அதிகாரிகளை கைது செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் கைதானால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement