Ad Code

Responsive Advertisement

கல்வியாளர்கள் உள்பட 1.65 லட்சம் பேருக்கு பள்ளி நிர்வாக மேலாண்மைப் பயிற்சி

பள்ளிகளை நிர்வகிப்பது தொடர்பாக பள்ளி மேலாண்மை, வளர்ச்சிக் குழுக்களைச் சேர்ந்த 1.65 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகியவற்றின் சார்பில் இந்தப் பயிற்சி வழங்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளை நிர்வகிக்க ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேலாண்மை, வளர்ச்சிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்கள், உள்ளாட்சி மன்றத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், பெற்றோர்கள் என ஒவ்வொரு குழுவிலும் 22 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

பள்ளிகளின் தலைமை ஆசிரியரோடு இணைந்து பள்ளிகளை எவ்வாறு மேம்படுத்துவது, ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்வது, வகுப்பறை, கழிவறை வசதிகளை மேம்படுத்துவது, பள்ளிகளில் விழாக்களை நடத்துவது, கல்வித் தரத்தை அதிகரிக்க உள்ளூரில் உள்ள பட்டதாரிகளைக் கொண்டு சிறப்பு வகுப்புகள் எடுக்கச் செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மாநில அளவில் முதல் கட்டமாக நவம்பர் 14-ஆம் தேதி மதுரையிலும், இரண்டாம் கட்டமாக சென்னையில் நவம்பர் 18-ஆம் தேதியிலும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

அதன் பிறகு, மாவட்டந்தோறும் இந்தக் குழுக்களைச் சேர்ந்த 1.65 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்படும்.

இந்தப் பயிற்சியின்போது பள்ளியை நிர்வகிப்பது தொடர்பான கையேடுகளும் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வரும் ஆண்டுகளில் பள்ளி மேலாண்மை, வளர்ச்சிக் குழுக்களைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்தப் பயிற்சி வழங்கப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement