Ad Code

Responsive Advertisement

10, பிளஸ் 2 தேர்வில் நஷ்டத்தை சமாளிக்க விடைத்தாளில் 12 பக்கங்கள் வரை குறைக்க தேர்வு துறை உத்தரவு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்களுக்கு தேர்வுத் துறை வழங்கும் விடைத்தாளில் 8 முதல் 12 பக்கங்கள் வரை குறைத்து வழங்க தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடக்கிறது. இதற்கான கேள்வித்தாள் தயாரிப்பது மட்டும் அல்லாமல் விடைத்தாளையும் தேர்வுத்துறையே வழங்கி வருகிறது. மேலும், தவறுகளை களையும் வகையில், மாணவர்களின் தேர்வு எண், பாடம் உள்ளிட்ட விவரங்களை தேர்வுத்துறையே விடைத்தாளின் முகப்பில் அச்சிட்டு வழங்கி வருகிறது. 

மேலும், தேர்வு எழுதும் போது வழங்கப்படும் பிரதான விடைத்தாள் முன்பெல்லாம் 8 பக்கம் இருக்கும். அதற்கு பிறகு துணைத் தாள் வாங்கி எழுத வேண்டிய நிலை இருந்தது. அதனால் கால விரயம் ஏற்படுகிறது என்று கருதிய தேர்வுத் துறை பிரதான விடைத்தாளின் பக்கங்களை அதிகரித்து மொத்தமாக வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு தொடங்கியது. ஆனால், இப்படி வழங்கப்பட்ட விடைத் தாள்களை முழுமையாக, மாணவர்கள் பயன்படுத்தவில்லை என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தேர்வுத்துறைக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து விடைத்தாளின் பக்கங்களை குறைக்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.  இது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
வரும் 2015ம் ஆண்டு நடக்க இருக்கும் பிளஸ் 2 தேர்வில், மொழிப்பாடங்களுக்கு 40 பக்கங்களுக்கு பதிலாக 32 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் வழங்கப்பட வேண்டும். 

விலங்கியல், தாவரவியல் பாடத் தேர்வுக்கு 52 பக்கங்களுக்கு பதிலாக 44 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் வழங்க வேண்டும். கணினி அறிவியல் பாடத்தேர்வுக்கு 40 பக்கங்களுக்கு பதிலாக 32 பக்கங்கள், கணக்கு பதிவியல் தேர்வுக்கு 54 பக்கங்களுக்கு பதிலாக 46 பக்கங்கள், மற்ற பாடங்களுக்கு 40 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் வழங்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்வில் மொழிப்பாடங்களுக்கு 32 பக்கங்களுக்கு பதிலாக  24 பக்கங்களும் வழங்கப்பட வேண்டும். தமிழ் இரண்டாம் தாளில் இடம் பெறும் ரயில்வே முன்பதிவு மற்றும் ரத்து படிவங்கள், வங்கியில் பணம் செலுத்தும் படிவம், பணம் பெறும் படிவம், ஆகிவற்றை தனித்தனியாக வழங்காமல் முதன்மை விடைத்தாளில் நான்கு பக்கங்களில் அச்சிட்டு வழங்கப்பட வேண்டும். சமூக அறிவியலை பொருத்தவரை விடைத்தாளில் முதல் நான்கு பக்கங்களில் இரண்டு இந்திய வரைபடங்கள், ஒரு ஐரோப்பா வரைபடம், ஒரு ஆசியா வரைபடம், அச்சிட்டு வழங்கப்பட வேண்டும். கணிதம், அறிவியல் பாடங்கள் முன்பு இருந்தபடியே 30 பக்கங்கள் வழங்கப்பட்டாலும், முதல் பக்கத்தில் கேம்ப் எண், பண்டல் எண், பாக்கெட் எண் போன்ற விவரங்கள்  இடம் பெறும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement