Ad Code

Responsive Advertisement

அனைவருக்கும் கல்வித் திட்டம்: 1- 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிகழாண்டில் முக்கியத்துவம்

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்விக்கு நிகழாண்டு முக்கியத்துவம் வழங்க அனைவருக்கும் கல்வித் திட்ட மாநில இயக்ககம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், மாணவர்களுக்கு மிகக் குறைந்த வயதிலேயே மொழியறிவு, கணித அறிவு போன்றவற்றில் புரிதலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறியது:

கணிதம், ஆங்கிலம், தமிழ், அறிவியல் பாடங்களில் மேல் வகுப்புகளுக்கு உதவும் வகையில், பல்வேறு புதிய பிரிவுகளைக் கொண்ட செயல் வழிக் கற்றல் அட்டைகள் நிகழாண்டில் வழங்கப்பட உள்ளன. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய முறையில் வகுப்புகளை எடுப்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.

இப்போது தமிழ் பாடத்தில் பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன. ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் விரைவில் பயிற்சிகள் வழங்கப்படும். இந்தப் பயிற்சிகளின் மூலம் 5, 6-ஆம் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தப்படும்.

கணக்கெடுப்பு: அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில், பள்ளி செல்லாக் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு இப்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின்படி, தமிழகம் முழுவதும் 44 ஆயிரம் குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்லவில்லை. இப்போதைய கணக்கெடுப்பில், புதிதாக மாணவர்கள் பள்ளிகளிலிருந்து இடையிலேயே நின்றிருந்தால், அவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்படுவர். வெளி மாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள் குறித்து வரும் ஏப்ரல் மாதத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்தக் குழந்தைகளுக்காக, அவரவர் தாய்மொழியில் சிறப்பு மையங்கள் நடைபெற்று வருகின்றன.

ரூ.2 ஆயிரம் கோடி: அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களுக்காக நிகழாண்டு மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட அதிகம் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement