Ad Code

Responsive Advertisement

பார்வையற்றவர்கள் வாழ ஏதுவான நகரம்... சென்னைதான் பெஸ்ட் - தன்னம்பிக்கையோடு சொல்கிறார் தமிழாசிரியர்


வருடாவருடம் தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்துக்காட்டும் தரமான மாநகராட்சி பள்ளிகளில் ஒன்று, வெளியில் கேட்கும் வாகன இரைச்சல் உள்ளே துளியளவும் எட்டிப்பார்க்காது, மரங்கள் அடர்ந்து ஒரு கிராம சூழலை தரும்... இப்படி பல சிறப்பம்சங்கள் கொண்ட எம்ஜிஆர் நகர் மேல்நிலைப்பள்ளியின் மேலும் ஒரு சிறப்பம்சம் தமிழாசிரியர் கண்ணன். இவர் பார்வையற்றவர். ஆனால் தன்னம்பிக்கை நிறைந்தவர். தான் எடுக்கும் தமிழ் பாடத்தில் தொடர்ந்து 5 வருடங்கள் மாணவர்களை சென்டம் எடுக்க வைத்தவர். கம்ப்யூட்டர், லேப்டாப் என நவீன தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவர். இவரை சந்தித்து சன்டே தினகரனுக்காக உரையாடினோம்.

சேலம், செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த எனக்கு பிறக்கும்போது நரம்பு தளர்வு பிரச்சினை இருந்ததால் பார்வை குறைபாடும் இருந்தது. ஒரு பூச்சி தெரிவது போல பார்வை மிகவும் மங்கலாகவே தெரியும். அதை வைத்துக்கொண்டே 5ம் வகுப்பு வரை மற்ற மாணவர்கள் படிக்கும் சாதாரண பள்ளியி லேயே படித்தேன். அதற்கு மேல் பார்வை சுத்தமாக தெரியவில்லை. அதனால் பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் 6ம் வகுப்பில் இருந்து படிக்கத் தொடங்கிவிட்டேன். அதிலிருந்து எனக்கு விடுதி வாழ்க்கைதான். அப்போது நமக்கான வேலையை நாமே செய்ய எப்படி செய்ய வேண்டும் என்பதை பழகிக்கொண்டேன். 

இந்நிலையில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் 2ம் இடம் பெற்று தேர்ச்சியடைந்தேன். அதன்மூலம் மாநில கல்லூரியில் பி.ஏ. தமிழ் வகுப்பில் சேர்ந்து படித்தேன். அதை முடித்துவிட்டு புதுக்கோட்டையில் பிஎட் படித்தேன். அதை தொடர்ந்து மாநில கல்லூரியில் எம்ஏ தமிழ் படித்தேன். அங்கு எம்ஏ படித்துக்கொண்டிருக்கும்போதே டிஆர்பி தேர்வெழுதி வெற்றி பெற்றதன் மூலம் ஆசிரியர் பணியும் கிடைத்துவிட்டது. பார்வையற்றவர்களுக்கென்று தனி ஒதுக்கீடு இருந்தும் 150க்கு 121 என்ற மதிப்பெண் எடுத்து பொதுப்பிரிவிலேயே தேர்வானேன் என்பது கூடுதல் மகிழ்ச்சி. 

வேலை கிடைத்த புதிதில் அதாவது 2002ம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வலசைப்பட்டி உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்தேன். 2004ம் ஆண்டில் சென்னைக்கு மாற்றல் கேட்டு வாங்கி இந்த எம்ஜிஆர் நகர் பள்ளியில் பணிபுரிகிறேன். பார்வையற்றவர்களுக்கு தமிழ்நாட்டில் மிகப்பிடித்தமான ஊர் சென்னைதான். இங்குதான் அவர்கள் விரைவாக பயணிக்க முடியும். ரயில் போன்ற விரைவுப்போக்குவரத்து நிறைந்திருப்பது, படித்தவர்கள் அதிகம் இருப்பதால் எங்களை புரிந்துகொள்வது, சாலையைக் கடக்க உதவுவது போன்றவைதான் அதற்கு காரணம். அதனால்தான் நான் சென்னைக்கு மாற்றல் வாங்கினேன்.

பணியில் சேர்ந்த மறுவருடமே அதாவது 2003ல் எனது உறவுக்கார பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இப்போது எனக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. பார்வையற்றவர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளை அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் கொஞ்சம் விலக்கிவைத்தேதான் நடத்தும். அவர்களுக்கு நல்ல திறமையிருந்தாலும் இவருக்கு முடியாது. 

சும்மா உட்கார்ந்திருந்திருந்தால் போதும் என்று அங்கீகரிக்கமாட்டார்கள். ஆனால் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் எனக்கான பொறுப்புகளை கொடுத்து ஊக்கப்படுத்துகிறார். இங்கு உயர்நிலை வகுப்புகளுக்கான உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிகிறேன். இதுபோன்ற அங்கீகாரம் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கிடைக்க வேண்டும்‘ என்கிறார் கண்ணன்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement