Ad Code

Responsive Advertisement

எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அவசியமா? மாநிலங்களின் கருத்தை கேட்கிறது மத்திய அரசு

இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) படி, 'எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி' என்ற நிலையால், அந்தந்த வகுப்பிற்குரிய திறனை பெறாமல், அடுத்தடுத்த வகுப்புகளுக்கு மாணவர் வந்துவிடுவதால், பெரிய வகுப்புகளில், மாணவர் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், கட்டாய தேர்ச்சியின் அவசியம் குறித்து, மாநில அரசுகள், கருத்து தெரிவிக்குமாறு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுள்ளது.ஆர்.டி.இ., சட்டத்தில், எட்டாம் வகுப்பு வரை, கட்டாயம் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது. இதை அப்படியே வேத வாக்காக எடுத்துக் கொண்டு, அனைத்து மாணவர்களையும், அடுத்தடுத்த வகுப்புகளுக்கு, 'புரமோட்' செய்து விடுகின்றனர். குறிப்பாக, அரசு பள்ளி ஆசிரியர்கள், இப்படி செய்கின்றனர். ஆனால், தனியார் பள்ளிகள், சரியாக படிக்காத மாணவருக்கு, சிறப்பு பயிற்சி அளித்து, தனியாக சிறப்புத் தேர்வை நடத்தி, அதில் தேறினால், அடுத்த வகுப்பிற்கு, 'புரமோட்' செய்கிறது.

சாதக, பாதகங்கள்:
கட்டாய தேர்ச்சியினால், ஒவ்வொரு வகுப்பிற்குரிய திறனை, மாணவர்கள் பெறாமலேயே, ஒன்பதாம் வகுப்பிற்கு வந்துவிடும் நிலை உள்ளது. அதற்கு அடுத்த ஆண்டில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் நிலைக்கு, மாணவர்கள் தள்ளப்படுகின்றனர்.பிரச்னையின் அபாயத்தை உணர்ந்துள்ள மத்திய அமைச்சகமும், கட்டாய தேர்ச்சியினால் ஏற்பட்டுள்ள சாதக, பாதக அம்சங்களை ஆராய துவங்கி உள்ளது.இது தொடர்பாக, மாநில அரசுகள், கருத்து தெரிவிக்குமாறு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுள்ளதாகவும், 'கட்டாய தேர்ச்சி தேவையில்லை' என, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் வலியுறுத்தி உள்ளதாகவும், கல்வித் துறை வட்டாரம் தெரிவிக்கிறது.தமிழக அரசு தரப்பில், இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது.

மறந்து விடுகின்றனர்:
இந்த விவகாரம் குறித்து, கல்வியாளர், பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்பதை, ஆசிரியர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். மாணவர்கள், ஒவ்வொரு வகுப்பிற்குரிய கற்றல் அறிவை, முழுமையாக பெற வேண்டும், அதற்கேற்ப கற்பிக்க வேண்டும் என்பதை, ஆசிரியர்கள் மறந்து விடுகின்றனர்.சட்டத்தை, ஆசிரியர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, கற்பித்தலில் மெத்தனம் காட்டு கின்றனர். சட்டத்தில் உள்ள எந்த பிரிவையும் நீக்க வேண்டிய அவசியமே இல்லை.ஒவ்வொரு வகுப்பிற்கும், பாட வாரியாக ஆசிரியர்கள் இருந்தால், அவர், சரியான முறையில் கற்பித்தல் பணியை செய்தால், அனைத்து மாணவர்களும், கண்டிப்பாக, அந்தந்த வகுப்பிற்குரிய அறிவை பெறுவர். மாணவர் - ஆசிரியர் விகிதாசார கணக்கீடு, இங்கே தவறாக கணக்கிடப்படுகிறது.ஒரு பள்ளியில், 60 மாணவர் இருந்தால், இரண்டு ஆசிரியர்கள் போதும் என, அரசு கருதுகிறது. ஆனால், 60 பேரும், பல வகுப்புகளில், பிரிந்து இருப்பர்.அப்போது, வகுப்பு வாரியாக, பாட வாரியாக, தனித்தனி ஆசிரியர்கள் இருந்தால் தான், கற்பித்தல் பணி சிறப்பாக இருக்கும். இதுபோன்ற நிலை, பல அரசு பள்ளிகளில் இல்லாதது தான் பிரச்னை.இவ்வாறு, பிரின்ஸ் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement