Ad Code

Responsive Advertisement

அரசுப் பள்ளி உதவியாளர் பணியிட நியமனத்தை இறுதி செய்ய இடைக்காலத் தடை

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களின் நியமனத்தை இறுதி செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வேலூர் காட்பாடியைச் சேர்ந்த கோபி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்புவதற்கு பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக எந்தவொரு விளம்பரமும் வெளியிடப்படவில்லை. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. மேலும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மட்டுமே அரசுப் பணியிடங்களை நிரப்பக் கூடாது.

பொது அறிவிப்பு வெளியிட்டு, போட்டித் தேர்வு நடத்தி அதன் மூலம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவில் தெரிவித்துள்ளது. எனவே, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்குத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு புதன்கிழமை (அக்.29) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைமுறைகள் மேற்கொள்ளப்படலாம்.

ஆனால், அதில் இறுதி முடிவு எடுக்கக் கூடாது என உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீல் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement