Ad Code

Responsive Advertisement

காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு - விலையில்லா பொருட்கள் அனைத்தும் இன்றே வழங்க வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை

காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகிறது. இன்றே இரண்டாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள்  வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 15ம் தேதி முதல் உயர் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு நடந்து 26ம் தேதியுடன் முடிந்தன. 27ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே 6ம் தேதி பக்ரீத் பண்டிகை வருவதால் அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனால் 6ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கடந்த மாதம் தமிழகத்தில் சில இடங்களில் உள்ளாட்சிகளுக்கான இடைத் தேர்தல் நடந்ததை அடுத்து கடந்த மாதம் 17, 18ம் தேதிகளில் நடக்க இருந்த காலாண்டுத் தேர்வுகள் அக்டோபர் 7, 8ம் தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் இன்றும் நாளையும் இரண்டு தேர்வுகள் அடுத்தடுத்து நடக்கும். ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சிறையில் இருந்து விடுவிக்ககோரி தனியார் பள்ளிகள் 7ம் தேதி போராட்டம் நடத்தும் என்றும் அதனால் 7ம் தேதி பள்ளிகள் இயங்காது என்றும் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியானது. அதற்கு பலதரப்பில் இருந்து கண்டனக் குரல் வந்ததை அடுத்து பள்ளிகள் இன்று இயங்கும் என்று தனியார் பள்ளிகள் அறிவித்துவிட்டன. இருப்பினும், சில தனியார் பள்ளிகள் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து செல்போன் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளன. இது மாணவர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பள்ளி திறக்கும் இன்று அனைத்து பள்ளிகளிலும் இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் மற்றும் அரசு வழங்கும் விலையில்லா பொருட்களையும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

இதன்படி, இன்று பள்ளிகள் திறந்ததும், பாடப்புத்தகங்கள் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 24 மையங்களுக்கு பாடப்புத்தகங்கள் சென்று சேர்ந்துள்ளன. இவை இன்று அனைத்து பள்ளிகளுக்கும் வினியோகம் செய்யப்படும். சுமார் 6 கோடியே 50 லட்சம் புத்தகம் தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கான பாடப் புத்தகங்கள் பள்ளி நிர்வாகம் அனுப்பி வைக்கும் தேவைப்பட்டியலின்படி அந்தந்த பள்ளிகளுக்கு சப்ளை செய்யவும் தமிழ்நாடு பாடநூல் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement