Ad Code

Responsive Advertisement

மத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம்: தமிழக இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து முடிவெடுக்க வேண்டும்: மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு - தினத்தந்தி

 மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் இடை நிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் கேட்டு வைத்துள்ள கோரிக்கை குறித்து 8 வாரங்களுக்குள் முடிவு செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சங்கம் சார்பில் மனு

சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.கிப்சன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1.16 லட்சத்துக்கு மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

இவர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.4 ஆயிரத்து 500 ஆக உள்ளது. 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி இந்த தொகை ரூ.5 ஆயிரத்து 200 ஆக உயர்ந்தது. ஆனால் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ.9 ஆயிரத்து 300 ஆக உள்ளது.

கூடுதல் செலவு

இந்த ஊதிய விகிதத்தை ஆய்வு செய்வதற்கு ஒருநபர் குழுவை தமிழக அரசு நியமித்தது. இந்த குழுவின் அறிக்கை 2010-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தமிழகத்தில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களின் எண்ணிக்கையை கணக்கிடும்போது, மத்திய இடைநிலை ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. மாநில இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்தினால் அரசுக்கு கூடுதலாக ரூ.668 கோடி செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இணையான சம்பளம்

ஆனால் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.310 கோடி மட்டும்தான் செலவாகும். டிப்ளமோ படித்துவிட்டு மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கும், மத்திய அரசின் ஊதிய விகிதம் வழங்கப்படுகிறது.

ஆனால், மாநில இடைநிலை ஆசிரியர்களுக்கு அந்த சலுகை வழங்கப்படவில்லை. எனவே, மத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான சம்பளத்தை, தமிழக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கும்படி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

8 வாரங்களில்

இந்த மனுவை நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் விசாரித்தார். மனுதாரரின் இந்த கோரிக்கையை 8 வாரங்களில் பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement