Ad Code

Responsive Advertisement

தமிழ் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை : பி.பி.எம்.பி., கல்வி நிலைக்குழு தலைவர் உறுதி

''பெங்களூரு தமிழ் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, சங்க காமராஜர் உயர்நிலைப் பள்ளி, கல்லூரிகளில் உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க
நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பி.பி.எம்.பி., கல்வி நிலைக்குழு தலைவர் தன்ராஜ் தெரிவித்தார்.

தமிழ் சங்கம் : பெங்களூரு தமிழ் சங்கத்தின், 102வது திருமண மேடை நேர்காணலை, பி.பி.எம்.பி., கல்வி நிலைக்குழு தலைவர் தன்ராஜ், அவரது மனைவி பிரதிபா ஆகியோர், குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். இருவருக்கும், தமிழ் சங்கம் சார்பில் சால்வை, மாலை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில், தன்ராஜ் பேசியதாவது: பி.பி.எம்.பி., கல்வி நிலைக்குழு தலைவராக பொறுப்பேற்ற உடனேயே, மாநகராட்சியிலுள்ள பள்ளிகள், கல்லூரிகள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கான வசதிகள் பற்றியும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவிற்கான காரணம் பற்றியும் ஆராய்ந்தேன். அவற்றை நீக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொண்டேன். அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தாய் வீடு : தமிழ் பள்ளிகளில், தமிழ் ஆசிரியர்களை நிரப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பெங்களூரு தமிழ் சங்கம், நம் அனைவருக்கும் தாய் வீடு போன்றதாகும். ஆகவே, தாய் செய்யும் கடமையை, சங்கம் செய்யும். நானும், பெங்களூரு தமிழ் சங்கத்துக்கும், தமிழர்களுக்கும் வேண்டிய உதவிகளை, என் கடமையாக ஆற்றுவேன்.
பெங்களூருவிலுள்ள பல அமைப்புகளுக்கு, அரசியல் பலம் இருப்பதால், அவர்களின் தடைகள் சாதாரணமாக நீக்கப்படுகின்றன. அதுபோன்று, நாமும் அரசியல் பலம் பெற வேண்டும். அதற்கு தமிழர்கள் வாழும் பகுதிகளில், தங்களது சார்பாளர்களாக, தமிழர்களை மாநகராட்சியிலும், சட்டசபையிலும் தேர்வு செய்ய வேண்டும்.

மாநாடு : மேலும், 2015 மார்ச்சில் நடக்கவுள்ள, கர்நாடக தமிழர்களின் மாநாட்டை சிறப்பாக நடத்தி, தமிழர்களின் ஒற்றுமையையும், வலிமையையும் காட்ட முனைவோம்.
நம் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து, திருவள்ளுவர் ஊர்வலத்தை, எப்பொழுதையும் விட சிறப்பாக நடத்த வேண்டும். நாம் ஒன்று பட்டு செயல்பட்டால், எதிர்பார்க்கும் வெற்றிகளை பெற முடியும். புதிய நிர்வாகிகளுக்கு, என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார். பெங்களூரு தமிழ் சங்க தலைவர் தாமோதரன், செயலர் தரன், துணைத் தலைவர் தாமோதரன், பொருளாளர் சம்பத், திருமண மேடை பொறுப்பாளர் கோபிநாத், துணை செயலர் பாரி ஆகியோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement