Ad Code

Responsive Advertisement

ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஐகோர்ட் தடை - தகுதிகாண் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனத்துக்குத் தடை - கவுன்சிலிங் நடத்த தடையில்லை

பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கு தடை விதித்து, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. புதுக்கோட்டை காதக்குறிச்சி தமிழரசன் தாக்கல் செய்த மனு பி.எஸ்.சி.,- பி.எட்., படித்துள்ளேன். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். 2013 ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் 150 க்கு 92 மதிப்பெண் பெற்றேன். இதனால், பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தகுதி பெற்றேன். 2014 மே 30 ல் தமிழக அரசு, 'பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட்., மற்றும் தகுதித் தேர்விற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும்.
அதனடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப் படுவர்,' என உத்தரவிட்டது. 20 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வி முறை வேறு; 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கல்வி முறைவேறு. மதிப்பெண் வழங்கும் முறையும் வேறு. 25 ஆண்டுகளுக்கு முன் அதிக மதிப்பெண் பெறுவது கடினம். அரசு உத்தரவில் பணிமூப்பு, அனுபவத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கவில்லை. எனக்கு 20 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் உள்ளது. இதுபோன்ற உத்தரவு யதேச்சா திகாரமானது; விஞ்ஞானப் பூர்வமானதும் அல்ல. தகுதித் தேர்வில் 92 மதிப்பெண் வாங்கினாலும், வெயிட்டேஜ் மதிப்பெண் 59.08 ஆக குறைந்து விட்டது. பிளஸ் 2, பட்டப்படிப்பு கணக்கில் கொள்ளப்பட்டதால், எனக்கு வெயிட்டேஜ் குறைந்து விட்டது. ஆசிரியர் பணி வாய்ப்பு பறிபோய் விட்டது. சமமான அளவீட்டு முறையை பின்பற்ற வேண்டும். தகுதித் தேர்வு அடிப்படையில், என்னை தகுதியானவராக கருதி, பணி நியமனம் வழங்க வேண்டும். வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும், என குறிப்பிட்டார். இதுபோல் மேலும் 17 பேர், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு எதிராக மனு செய்தனர். நீதிபதி கே.கே.சசிதரன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வக்கீல்கள் கணபதி சுப்பிரமணியன், லஜபதிராய், வீரகதிரவன், கிறிஸ்டோபர், எபனேசர் ஆஜராயினர். நீதிபதி, "வெயிட்டேஜ் மதிப்பெண்ணை எதிர்த்து தாக்கலான வழக்கு, சென்னை ஐகோர்ட் பெஞ்ச்சில் நிலுவையில் உள்ளது. கவுன்சிலிங் நடத்த தடையில்லை. பணி நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தால், பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது,” என்றார். பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர், இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement