Ad Code

Responsive Advertisement

"விடுமுறை நாள்களில் ஆசிரியர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது'!!

மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுப்பதற்காக விடுமுறை நாள்களிலும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என கல்வித் துறை அலுவலர்கள் வலியுறுத்துவதைக் கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இக் கழகத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ஜி.எஸ். இந்து மேல்நிலைப் பள்ளியில் மாவட்டத் தலைவர் வெ. வீரபாண்டியராஜ் தலைமையில் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத் தலைவர் ஸ்ரீதரன் வரவேற்றார். மாவட்டச் செயலர் கே.எம். மூர்த்தி விளக்கவுரையாற்றினார். மாநிலத் தலைவர் ஜி. சுப்பையா சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அரசாணை எண் 720இல் உள்ள குறைபாடுகளைக் களைய நியமிக்கப்பட்ட கருணாகரன் குழு அறிக்கையை கல்வித் துறை வெளியிட்டு, அறிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
1989-90ஆம் ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்குப் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிக் காலத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். தேர்ச்சி விழுக்காட்டை காரணம் காட்டி ஆசிரியர்களை ஒருமையில் பேசுவதை கல்வித் துறை அலுவலர்கள் தவிர்க்க வேண்டும்.

9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்ச்சி விழுக்காட்டை கட்டாயமாக 100 சதவீதம் என வலியுறுத்தக் கூடாது. காலிப் பணியிடங்களில் உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற சி.ச.சு.நா. அரசுப் பள்ளி ஆசிரியர் கு. பழனிச்சாமி    கௌரவிக்கப்பட்டார். கூட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் காளிதாஸ் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement