Ad Code

Responsive Advertisement

பி.எட்., பயில 'புரவிஷனல்' சான்றிதழ் கட்டாயம்; ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவிப்பு.

பி.எட்., கல்வி பயில புரவிஷனல் சான்று கட்டாயமாக இணைக்க வேண்டும் என,   தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது. ஆசிரியர் 
கல்வியியல் கல்லுாரிகளில், நடப்பு கல்வியாண்டு பி.எட்., படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், ஜூலையில் நடந்தது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில், முதல் முறையாக ஆன்லைன் முறையிலான விண்ணப்ப வினியோகம் அறிமுகம் செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும், 29 மையங்களில் விண்ணப்பங்கள் பதிவுசெய்யப்பட்டன. 

தொடர்ந்து, சென்னை, மதுரை, கோவை, சேலம் ஆகிய நான்கு மையங்களில், ஆக., 5 முதல் 9ம் தேதி வரை மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடந்தது. பெரும்பாலான கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் நடந்து வருகிறது. தனியார் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுப்பிரிவு மாணவர் சேர்க்கையும் நடந்துள்ள நிலையில், பல மாணவர்கள் தங்கள் படித்த படிப்புக்குரிய புரவிஷனல் சான்று இணைக்காமல், மதிப்பெண் பட்டியல் மட்டுமே அளித்துள்ளனர்.மாணவர்கள் பயின்ற கல்லுாரியின் பல்கலைக்கழகம் புரவிஷனல் சான்று அளிக்காத நிலையில், சான்று இல்லாத மாணவர்களை சேர்க்க வழி உள்ளதா என, தொடர்புடைய கல்லுாரிகள், ஆசிரியர் பல்கலையை கேட்டுக்கொண்டுள்ளது. உயர்கல்வி சட்ட விதிகளின்படி, புரவிஷனல் சான்று இல்லாத மாணவர்களை சேர்க்கக்கூடாது என பி.எட்., கல்லுாரிகளுக்கு, பல்கலை கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கல்வியியல் பல்கலை விதிகளின்படி, புரவிஷனல் சான்றிதழ் மாணவர் சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது; கட்டாயம் இணைக்கவும் அறிவுறுத்தியுள்ளோம்.

பி.எட்., பயில விரும்பும் மாணவர்களுக்காக, பட்டம் முடித்தவர்களுக்கு விரைவில் புரவிஷனல் சான்று வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, சில பல்கலைகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்' என்றார். அரசு கல்வியியல் கல்லுாரி முதல்வர் ஒருவரிடம் கேட்டபோது, 'அனைத்து பல்கலையும் ஒரே சமயத்தில் புரவிஷனல் சான்றிதழ்கள் வழங்குவதில்லை. எனவே, முதலில் மதிப்பெண் சான்றிதழ் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது; புரவிஷனல் சான்றிதழ் கிடைத்தவுடன் வழங்குவதாக, மாணவர்களிடம் கடிதம் எழுதி வாங்கப்படுகிறது. மாணவர்களின் நலன் கருதி, பட்டம் முடித்த மாணவர்களுக்கு பிற பல்கலைகள் உடனடியாக புரவிஷனல் சான்று வழங்க வேண்டும்' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement