Ad Code

Responsive Advertisement

பெற்றோர் கண்காணிப்பு மாணவர்களுக்கு அவசியம்

 ''மருத்துவக் கல்லூரியில் பிள்ளைகளை சேர்த்ததோடு கடமை முடிந்ததாக பெற்றோர் கருதக்கூடாது.அவர்களை நல்வழிப்படுத்த, படிப்புக் காலம் முடியும் வரை, தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்,'' என, மருத்துவக் கல்வி இயக்குனர், கீதாலட்சுமி தெரிவித்தார்.

தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று துவங்கின. மாணவ, மாணவியரை, மலர் கொத்து கொடுத்தும், இனிப்பு வழங்கியும், மூத்த மாணவர்கள் வரவேற்றனர். சென்னை மருத்துவக் கல்லூரியில், மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி, விழாவாக கொண்டாடப்பட்டது.

இதில், மருத்துவக் கல்வி இயக்குனர், கீதாலட்சுமி பேசியதாவது: மருத்துவக் கல்வி என்பது நீண்ட கால படிப்பு; மக்களுக்கு சேவையாற்றும் அரிய வாய்ப்பு உள்ளது. படிப்பு முடியும் வரை, இதே உற்சாகத்தோடு மாணவர்கள் பயில வேண்டும். மருத்துவக் கல்லூரியில், பிள்ளைகளை சேர்த்துவிட்டோம் என, பெற்றோர் பெருமையோடு இருக்கின்றனர். அதே பெருமை தொடர்ந்து கிடைக்கச் செய்வது, உங்கள் கையில் தான் உள்ளது. படிப்போடு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றல் என, உங்கள் மனதை நல்வழியில் செலுத்துங்கள். கல்லூரியில் சேர்ந்த பிள்ளைகளை, ஆறு மாதங்களே பெற்றோர் கண்காணிக்கின்றனர். அதன் பின், என் பிள்ளை நன்றாக படிக்கிறது என, கண்காணிப்பை விட்டு விடுகின்றனர். இரண்டாம் ஆண்டு வரை, விடலைப் பருவம். இந்த காலத்தில் குழந்தைகள் வழி தவறி விடாமல் இருக்க, பெற்றோரின்
தொடர் கண்காணிப்பு அவசியம். 'ராகிங்' என்பது நம் மருத்துவக் கல்லூரிகளில் இருக்காது. நல்வழி காட்ட, மூத்த மாணவர், பேராசிரியர் கொண்ட வழிகாட்டு குழுக்கள் உள்ளன. அவர்கள் உங்களுக்கு உதவுவர். ஏதேனும் மன வருத்தம் தரும் நிகழ்வுகள் நடந்தால், உங்களிடம் தரப்பட்டுள்ள, 'டீன்,' பேராசிரியர்களின் எண்களில் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.

'டீன்' விமலா பேசுகையில், ''மாணவ, மாணவியர், ஜீன்ஸ் பேன்ட், டி - சர்ட் அணியக்கூடாது. உடை கட்டுப்பாடு முக்கியம். மூத்தோரை மதித்து நடங்கள். தனி மனித ஒழுக்கம், கடின உழைப்பு, நேரம் தவறாமை இருந்தால் சாதிக்கலாம். பாரம்பரியமிக்க சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நீங்கள், கொடுத்து வைத்தவர்கள்; சாதித்துக் காட்டுங்கள்,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement