Ad Code

Responsive Advertisement

அரசியலுக்கு வர அடித்தளமாக அமைந்த "ஆயிரத்தில் ஒருவன்': ஜெயலலிதா பெருமிதம்

அரசியலுக்கு, தான் வர அடித்தளமாக அமைந்தது "ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் எனவும், அந்தப் படத்தின் மூலமே எம்.ஜி.ஆரைச் சந்திக்கவும் பேசவும் வாய்ப்புக் கிடைத்ததாகவும் முதல்வர் ஜெயலலிதா பெருமிதத்துடன் தெரிவித்தார்.


எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்த வெற்றிப் படமான "ஆயிரத்தில் ஒருவன்' இப்போது மறுவெளியீடு செய்யப்பட்டு வெள்ளி விழா கொண்டாடுகிறது. இதற்காக, அந்தப் படத்தை மறுவெளியீடு செய்த திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கத்துக்கு முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை அனுப்பிய வாழ்த்துச் செய்தி:

கடந்த 1965-ஆம் ஆண்டே 100 நாள்கள் ஓடி சாதனை படைத்த "ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம், கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழித்தும் வெள்ளிவிழா காணும் அளவுக்கு வெற்றி நடை போட்டு, காலத்தைக் கடந்து அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் திரைப்படமாக விளங்குகிறது.

லட்சக்கணக்கான மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் திரைப்படமாகத் திகழ்கிறது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது. புதிய படங்கள் சாதிக்க முடியாததை "ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் சாதித்துக் காட்டி இருக்கிறது. தற்போதைய தலைமுறையினரும் இந்தத் திரைப்படத்தை மிகுந்த ஆர்வத்துடன் கண்டு களிக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது என் மனம் பூரிப்படைகிறது.

ஒரு திரைப்படம், திரையரங்குகளில் ஒரு வாரம் ஓடினாலே அதை வெற்றிப் படம் என்று சொல்கின்ற இந்தக் காலத்தில், "ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் 1965 ஆம் ஆண்டில் 100 நாள்களைக் கடந்து ஓடியதோடு, இன்றைக்கு மறுவெளியீட்டிலும் 175 நாள்கள் ஓடும் அளவுக்கு அதனை மக்கள் கண்டு ரசிக்கிறார்கள் என்றால், அந்தப் படத்தின் கதை, தரம், அந்தப் படத்தில் பங்கு  பெற்றவர்களின் திறமை ஆகியவை எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க முடிகிறது.

வாடாமலர் "ஆயிரத்தில் ஒருவன்': கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகும் சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை போல் வாடாமல் இருக்கின்ற வாடாமலர் "ஆயிரத்தில் ஒருவன்'. இந்த விழாவில் திரைப்படத்துக்கு இசையமைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், திரைப்படப் பின்னணிப் பாடகி பி. சுசீலா, வசனகர்த்தா ஆர்.கே. சண்முகம், நடிகைகள் எல். விஜயலட்சுமி, மாதவி ஆகியோர் சென்னையில் நடைபெறும் வெள்ளி விழாவில் கெüரவிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்தேன்.

மிக்க மகிழ்ச்சி. இந்தத் திரைப்படத்துக்கு அவர்கள் செய்த திருப்திகரமான பணியை, நிறைவை, நான் இந்தத் தருணத்தில் நினைவுகூர்ந்து அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  "ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தைத் தயாரித்து, இயக்கிய இயக்குநர் மறைந்த  பி.ஆர். பந்துலு, எனது தந்தையைப் போன்றவர். என் மீது மிகுந்த பாசமும் மதிப்பும் வைத்திருந்தார். தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் என்றென்றும் தங்கள் மனங்களில் நிலைத்து நிற்கக்கூடிய திரைக் காவியங்களை படைத்த ஒரு மிகச் சிறந்த படைப்பாளி, தயாரிப்பாளரும் இயக்குநருமான பந்துலு.

அவருடைய படைப்புக்கு இன்றளவும் உயிரோட்டம் கொடுக்கும் வகையில், "ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தை எண்ணியியல் (டிஜிட்டல்) வடிவில் மறுவெளியீடு செய்து, அந்தத் திரைப்படம் மாபெரும் சாதனை படைக்க காரணமாக இருந்த பந்துலுவின் மகள் பி.ஆர். விஜயலட்சுமி, மகன் பி.ஆர். ரவிசங்கர் ஆகியோருக்கு எனது பாராட்டுகள். அவர்களது பணி தொடர எனது வாழ்த்துகள்.

அரசியலுக்கு அடித்தளமிட்ட படம்: என்னைப் பொருத்தவரையில், "ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் எனக்கு ஒரு மறக்க முடியாத வாழ்நாள் அனுபவத்தை பெற்றுத் தந்தது. ஏனென்றால், அதுதான் எம்.ஜி.ஆருடன் நான் நடித்த முதல் தமிழ்த் திரைப்படம்; வெற்றித் திரைப்படம். இந்தத் திரைப்படத்தின் மூலம்தான் எம்.ஜி.ஆரைச் சந்திக்கும் வாய்ப்பும் அவருடன் பேசுகின்ற வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. நான் அரசியலுக்கு வருவதற்கு அடித்தளமாக அமைந்த படம் "ஆயிரத்தில் ஒருவன்' என்று சொன்னால் அது மிகையாகாது. எம்.ஜி.ஆருடன் அதிகமான, அதாவது 28 திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த பெருமையும் என்னையே சாரும் என்று வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

வெள்ளி விழாவில் பங்கேற்க முடியாததற்கு காரணம்
சென்னையில் நடைபெற்ற "ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தின்  வெள்ளி விழாவில் பங்கேற்க முடியாததற்கான காரணத்தை முதல்வர் ஜெயலலிதா விளக்கியுள்ளார்.

 இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:  மறுவெளியீட்டில் மாபெரும் சாதனை படைத்த "ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தின் வெள்ளி விழா குறித்து எனக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தால், இந்த நிகழ்ச்சியில் நானே நேரில் வந்து பங்கேற்றிருப்பேன். முன்கூட்டியே ஒப்புக்கொண்ட பணிகள் காரணமாக என்னால் நேரில் கலந்து கொள்ள இயலவில்லை.

திரையுலக வரலாற்றில் முதல்முறையாக மறுவெளியீட்டில் மகத்தான சாதனை புரிந்த "ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தின் வெள்ளி விழா மிகச் சிறந்த முறையில் சீரோடும் சிறப்போடும் அமைய எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, தாங்கள் இன்னும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்றும் மனதார வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement