Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் பணி நியமனம் விவகாரம் முதல்வரின் வீட்டை மாற்றுத் திறனாளிகள் முற்றுகை

பட்டதாரி மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போயஸ்கார்டனில் முற்றுகையிட்டனர். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் அனை வருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.

ஆனால் 3% பேருக்குத்தான் பணி நியமனம் வழங்கப் போவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் சுமார் 200 பேர் தலைமைச் செயலகம் வந்தனர். முதல்வர் ஜெயலலிதாவை பார்த்து பேச அனுமதி கேட்டனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள் போயஸ் கார்டனுக்கு சென்று அங்கு முற்றுகையிட்டனர். 

இதையடுத்து, 2 பேரை மட்டும் அங்குள்ள அதிகாரிகள் கார்டனுக்குள் அனுமதித்தனர். அங்குள்ள அதிகாரிகள் மாற்றுத் திறனாளி ஆசிரியர்களிடம் பேசினர். பின்னர் வெளியில் வந்த ஆசிரியர் இருவரும் கூறியதாவது:

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 934 பட்டதாரி ஆசிரியர் அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம். ஆனால் எங்களின் கோரிக்கையை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. மொத்த நியமனத்தில் 3% பேருக்கு மட்டுமே பணி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்படி பார்த்தால் 934 பேருக்கு பணி நியமனம் கிடைக்காது. பொதுப் பிரிவில் வருவோரும் மாற்றுத் திறனாளிக்கான இடங் களை பெற்றுக் கொள்வார்கள். அதனால் மாற்றுத் திறனாளிகளுக்குரிய இடங்களில் அவர்களை மட்டுமே நிரப்ப வேண்டும். அதேபோல மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பள்ளிகளில் மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும். எஸ்எஸ்ஏ சிறப்பு ஆசிரியர் பணியை மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியருக்கே வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம். ஆனால் அரசு அதிகாரிகள் இது குறித்து எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளனர். ஒவ்வொரு முறையும் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

ஆனால், அதன்படி அறிவிக்கவில்லை. எனவே நேரடியாக முதல்வரை சந்தித்து பேச வேண்டும் என்று கேட்டு தலைமைச் செயலகத்துக்கு வந்தோம். ஆனால் முதல்வரை சந்திக்க எங்களை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. எனவே நாங்கள் முதல்வரின் வீடு உள்ள போயஸ் கார்டனுக்கு வந்தோம். அங்கும் முதல்வரை சந்திக்க அனுமதிக்கவில்லை. அங்குள்ள அதிகாரி மட்டுமே எங்களிடம் பேசினார். கோரிக்கை குறித்து தெரிவித்தோம். ஆனால் சரியான பதில் ஏதும் கூறவில்லை.

இவ்வாறு மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement