Ad Code

Responsive Advertisement

மத்திய அரசு பணியிடங்களில் வடகிழக்கு மாநிலத்தவர்கள்: புதிய நடைமுறையால் தமிழகத்தில் பெரும் குழப்பம்.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில், காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டாலும், மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தின் (ஸ்டாப் செலக்சன் கமிஷன்) புதிய நடைமுறையால், பணிகள் முடங்கி உள்ளன.
வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தமிழகப் பணிக்கு வந்தவர்கள், சொந்த மாநிலங்களுக்கு பணி மாறுதல் கேட்பதால், தமிழகத்தில் மீண்டும் காலி பணியிடங்கள்ஏற்படும் என தெரிகிறது.

9 மண்டலங்கள்:

மத்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை, வருமான வரித் துறை, சுங்கத் துறை, கலால்துறை உள்ளிட்ட மத்திய அரசு துறைகளுக்கு, மத்திய பணியாளர் தேர்வு ஆணையம், ஊழியர்களை தேர்வு செய்கிறது. இதற்காக, நாட்டை ஒன்பது மண்டலங்களாகப் பிரித்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளா போன்றவை தென் மண்டலத்தைச் சேர்ந்தவை.இந்த மாநிலங்களில் உள்ள மத்திய அரசு துறைகளுக்கு, அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களை தேர்வு செய்யும் நடைமுறை, 2012 வரை பின்பற்றப்பட்டது. இதனால், மொழிப் பிரச்னை இருக்காது. ஆனால், 2013 முதல், மத்திய அரசு பணிஇடங்களுக்கு நடைபெறும் தேர்வில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன்படி, யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம்.இதையடுத்து, அசாம், மேகாலயா போன்ற, வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கூட, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு துறைகளுக்கான, பணியாளர் தேர்வை எழுதலாம்.

தேர்ச்சி:

தமிழகத்தில், 2013ல், 2,000க்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களை தேர்ந்தெடுக்க, பணியாளர் தேர்வு ஆணையம் தேர்வு நடத்தியது. இதில், 90 சதவீதம், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களே தேர்ச்சி பெற்றனர். இவர்கள் அனைவருக்கும் பணி நியமனமும் வழங்கப்பட்டது. குறிப்பாக, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், கிளார்க், வருமான வரி ஆய்வாளர் போன்ற கீழ்நிலைப் பணிகளில், இவர்கள் பணி அமர்த்தப்பட்டனர். தமிழகத்தில், தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே அலுவலக மொழியாக உள்ளது.வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்களுக்கு, இவ்விரு மொழிகளுமே தெரியாது. அவர்களுக்கு அவர்களது தாய்மொழி அல்லது இந்தி தான் தெரியும்.

முடங்கியுள்ளன:

அன்றாடப் பணிகளைக் கூட, இப்பணியாளர்களால் செய்ய முடியவில்லை. அதனால், ஊழியர்கள் நியமிக்கப்பட்டும், மத்திய அரசு அலுவலகப் பணிகள் முடங்கியே உள்ளன என, கூறப்படுகிறது.

இதுகுறித்து, மத்திய அரசு ஊழியர் சங்கப் பொதுச்செயலர் துரைபாண்டியன் கூறியதாவது:மண்டல வாரியாக நிரப்பப்படும் தேர்வுகளில், அந்தந்த மண்டலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதால், இதுநாள் வரை, மொழிப் பிரச்னை இல்லாமல் இருந்தது.இத்தேர்வு முறையில், மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் கொண்டு வந்த புதிய நடைமுறைக்கு, பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இதைபொருட்படுத்தாமல், யார் வேண்டு மானாலும், எங்கு வேண்டு மானாலும் தேர்வு எழுதலாம் என்ற பணியாளர் தேர்வு ஆணையத்தின் நடவடிக்கையே, இப்பிரச்னைக்குக் காரணம்.மத்திய அரசு தேர்வுகள், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் நடத்தப்படுகிறது. இந்தி வட மாநில மக்களின் தாய்மொழி மற்றும் அலுவல் மொழி என்பதால், அவர்கள், இத்தேர்வுகளில் அதிகம் தேர்ச்சி பெறுகின்றனர். தமிழகம் போன்ற மாநிலங்களில், தமிழ் மற்றும் ஆங்கிலம் தான் அலுவல் மொழியாக உள்ளது.

பெரும் பிரச்னை:

வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்களால், தமிழகத்தில் பணியாற்ற முடிவதில்லை. பணியில் சேர்ந்து ஓர் ஆண்டு ஆன நிலையில், தற்போது, சொந்த மாநிலங் களுக்கு பணி மாறுதல் கோருகின்றனர்.எனவே, ஏற்கனவே அமலில் இருந்தது போல, அந்தந்த மண்டலத்தைச்சேர்ந்தவர்களை, கீழ் நிலைப் பணிகளுக்கு நியமிக்க வேண்டும் என்ற முறையை பின்பற்ற வேண்டும். இல்லையேல், மத்திய அரசு அலுவலகங்களில் பெரும் பிரச்னை ஏற்படுவதைத் தடுக்க முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement