Ad Code

Responsive Advertisement

முதல்வர் கொடுத்த தொகையில் கமிஷன் கேட்கின்றனர்: விடுதி காப்பாளர்கள் புலம்பல்

முதல்வர் கொடுத்த தொகையில் கமிஷன் கேட்கின்றனர் என, ஆதிதிராவிட நலத்துறை விடுதி காப்பாளர்கள் புலம்புகின்றனர். தமிழகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கீழ், 1,304 ஆதி திராவிடர் நல விடுதிகள் உள்ளன. இவற்றில், 97,539 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

பழங்குடியினர் நல விடுதிகள், 42 உள்ளன. இவற்றில், 2,782 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். அரசு உண்டு உறைவிடப் பள்ளிகள், 301 உள்ளன. இவற்றில், 31,594 மாணவ, மாணவியர் தங்கி படிக்கின்றனர். இவ்விடுதிகளுக்கு, குடிநீர் சுத்திகரிப்பு கருவி, கிரைண்டர், கலர் டிவி, எலக்ட்ரானிக் எடை கருவி, போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

சோப்பு மற்றும் எண்ணெய் வாங்க, பள்ளி மற்றும் தொழிற் பயிற்சி நிலைய விடுதி மாணவர்களுக்கு மாதம் 50 ரூபாய், கல்லுாரி மாணவர்களுக்கு 75 ரூபாய், அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. மாணவ, மாணவியருக்கான, உணவுக் கட்டணம், விடுதி காப்பாளர்களிடம் வழங்கப்படுகிறது. இக்கட்டணம், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும். சமையல் காஸ் விலை உயர்வு காரணமாக, உணவுக் கட்டணத்தை, உயர்த்தி வழங்க வேண்டும் என, விடுதி காப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அறிவிப்பு

அதை ஏற்று, பள்ளி மாணவர்களின் உணவுக் கட்டணம், 650 ரூபாயில் இருந்து 755 ஆகவும்; கல்லுாரி மாணவர்களின் உணவுக் கட்டணம், 750 ரூபாயில் இருந்து, 875 ரூபாயாகவும், உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, ஜனவரியில் இருந்து, மார்ச் வரை, உயர்த்தப்பட்ட தொகை சமீபத்தில் விடுதி காப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதை பெற்றதும், அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அதிகாரிகள், சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களை தொடர்பு கொண்டு, உயர்த்தி வழங்கப்பட்ட தொகையில், 20 சதவீதத்தை திரும்ப தரும்படி, துறை தலைமையின் பெயரை கூறி கேட்கின்றனர். எனவே, உடனடியாக அந்த பணத்தை கொடுங்கள் என கேட்டு வசூல் செய்துள்ளனர். இது, விடுதி காப்பாளர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத விடுதி காப்பாளர்கள் கூறியதாவது: முதல்வர், உணவு கட்டணத்தை, உயர்த்தி வழங்கியதும், மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், வலுக்கட்டாயமாக 20 சதவீதத்தை பிடுங்கிக் கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 சதவீதம் தர, எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து துறை அதிகாரிகள், விடுதியில் திடீர் சோதனை நடத்தி சிலரை சஸ்பெண்ட் செய்தனர்.

சொந்தப் பணம்

அதைத் தொடர்ந்து, அவர்களும் 20 சதவீதத் தொகையாக 18 லட்சம் ரூபாயை வழங்கினர். சில இடங்களில், விடுதி காப்பாளர்கள் பணம் தர மறுக்க, துறை தாசில்தார்கள், சொந்தப் பணத்தை வழங்கியுள்ளனர். இதுபோன்ற நிலை தொடராமலிருக்க, முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement