Ad Code

Responsive Advertisement

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் - இழுத்தடிக்கும் டி.ஆர்.பி.,

ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டும் மவுனம் காக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (டி.ஆர்.பி.,) அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணி நியமனங்கள் தாமதமாவதாக சர்ச்சை எழுந்துள்ளது. மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது.

மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இத்துறைக்கு உட்பட்ட துவக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 30 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு 1500 ஆசிரியர்கள் மட்டும் பணியில் உள்ளனர். ஆசிரியர் பற்றாக்குறையால் ஐந்தாண்டுகளில் தேர்ச்சி விகிதம், மாணவர் எண்ணிக்கை குறைகிறது.

ஒரு பள்ளியில் உள்ள ஆசிரியர், 40 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள மற்றொரு பள்ளிக்கு மாற்றுப் பணியாக செல்கிறார். மேல்நிலை பள்ளிகளில், தாவரவியல், விலங்கியல் பாடங்களை ஒரே ஆசிரியரும், வணிகவியல், கணக்குப்பதிவியல் மற்றும் பொருளியல் என மூன்று பாடங்களையும் ஒரே ஆசிரியரும் பல பள்ளிகளில் கற்பிக்கும் நிலையுள்ளது. ஆசிரியைகளை மாற்றுப்பள்ளிக்கு அனுப்புவதில் நடைமுறை சிக்கல் ஏற்படுகின்றன.

இதைத் தவிர்க்க, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணிநியமனங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடக்க பள்ளிகளில் 75 ஆசிரியர் (11 மாற்றுத்திறனாளி பிரிவுக்கு) பணியிடங்கள், 249 பட்டதாரி ஆசிரியர்கள் (இதில் 111 பேர் பள்ளி கல்வித் துறைக்கு மாறுதல்), முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 33 பேர் ஒதுக்கீடு செய்ய மார்ச் மாதம் இத்துறையால் சிபாரிசு செய்யப்பட்டது. இதற்கான ஒதுக்கீடும் ஆகஸ்ட்டில் வழங்கப்பட்டது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் எந்த நடவடிக்கையும் இல்லாததால், பணி நியமனத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது.

கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மாவட்ட தலைவர் சின்னப்பாண்டி கூறியதாவது: இத்துறையில் 6 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனங்கள் இல்லை. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் கவலையளிக்கிறது. பள்ளி கல்வியில், தரம் உயர்த்தப்படும் மேல்நிலை பள்ளிகளில் 9 ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.இத்துறையில் சென்றாண்டு தரம் உயர்த்தப்பட்ட ஐந்து மேல்நிலை பள்ளிகளில் தலா 5 பணியிடங்களே ஏற்படுத்தப்பட்டன. அதிலும் ஆசிரியர்கள் நியமிக்கவில்லை. கள்ளர் சீரமைப்பு துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, டி.ஆர்.பி., மூலம் ஆசிரியர் பணியிடங்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement