சென்னையில் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களின் போலி சான்றிதழ் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து அவர்களை பிடிக்க கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக திரிந்த 2 பேரை அணுகி மாறு வேடத்தில் சென்ற போலீசார் நைசாக பேச்சு கொடுத்தனர். அப்போது அவர்கள் இருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். ஒருவர் பெயர் சத்தியமூர்த்தி (வயது45). வியாசர்பாடியைச் சேர்ந்தவர். மற்றொருவர் பெயர் ஞானவேல் (48). கொடுங்கையூர்முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர்.இவர்கள் இருவரும் வந்திருப்பவர்கள் போலீஸ் என்று தெரியாமல் போலி சான்றிதழ் பற்றிய பேரத்தை தொடங்கினர்.போலீசாரும் தங்களை யார் என்று காட்டிக் கொள்ளாமல் சென்னை பல்கலைக்கழகத்தின் பி.ஏ. சைக்காலஜி சான்றிதழ் வேண்டும் என்று கேட்டனர். இதற்காக போலீசார் ரூ.25 ஆயிரத்தை புரோக்கர்களிடம் வழங்கினார்.இதையடுத்து சுமார் 2 வாரங்கள் கழித்து புரோக்கர்களே போலீசாருக்கு போன் செய்து போலி சான்றிதழ்களை கொடுத்தனர். அப்போது அவர்களை மடக்கி பிடித்த போலீசார் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
போலீஸ் விசாரணையில் இந்த புரோக்கர்கள் பற்றியும் போலி சான்றிதழ் தயாரிப்போர் பற்றியும் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:–கொடுங்கையூர் எம்.ஆர். நகர் வடிவுடையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கவுதமன் (57) மற்றும் வியாசர்பாடி எஸ்.ஏ. காலனியில் வசித்து வரும் அவரது மகன் லோகேஷ் (32) ஆகிய இருவரும் போலி சான்றிதழ்களை அச்சு அசலாக தயாரித்து புரோக்கர்களான சத்தியமூர்த்தி, ஞானவேல் ஆகியோர் மூலம் விற்பனை செய்துள்ளனர்.இதையடுத்து கவுதமன் வீட்டில் அதிரடியாக போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு போலி சான்றிதழ் தயாரிப்பதற்கு தனியாக கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள் ஆகியவையும் இருந்தது.அவைகளை பறிமுதல் செய்த போலீசார் சான்றிதழ்களை தயாரிக்க பயன்பட்ட 250–க்கும் மேற்பட்ட கல்வித்துறை முத்திரைகள், சான்றிதழ்களில் ஒட்டப்படும் 20 ஆயிரம் ஹோலோகிராம் ஸ்டிக்கர்கள், 7 கம்ப்யூட்டர்கள் மற்றும் போலி சான்றிதழ் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.அங்கு ஒரு பெரிய அட்டைப்பெட்டியில் போலியாக தயாரிக்கப்பட்ட பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களின் சான்றிதழ் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. 100–க்கும் மேற்பட்ட அந்த சான்றிதழ்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.போலி சான்றிதழ்களை தயாரித்து கைதாகியுள்ள கவுதமன் கடந்த 1990–ம் ஆண்டில் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி– கல்லூரி இயக்குனரக அலுவலக உதவியாளராக பணியில் சேர்ந்துள்ளார். தற்போது லேடி வெலிங்டன் உயர்கல்வி பயிற்சியகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் மற்றும் 5 பிள்ளைகள் உள்ளனர்.இவர் கடந்த 2000–வது ஆண்டில் ஏற்கனவே இதே போலி சான்றிதழ்களை தயாரித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் பணி இடை நீக்கம் செய்யப்பட்ட அவர் 2002–ம் ஆண்டு மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் 2012–ம் ஆண்டில் இருந்து மீண்டும் தனது மகன் லோகேசுடன் சேர்ந்து கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து போலி சான்றிதழ்களை தயாரித்து வந்துள்ளார். இதற்கு லோகேசின் கம்ப்யூட்டர் படிப்பு மிகப்பெரிய அளவில் உதவிகரமாக இருந்துள்ளது. கம்ப்யூட்டரில் பல்வேறு நுணுக்கங்களை தெரிந்த லோகேஷ் மூலமாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல்கல்லூரிகள், தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்லூரிகள், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 சான்றிதழ்களை கவுதமன் தயாரித்துள்ளார்.
இந்த சான்றிதழ்களை புரோக்கர்கள் மூலமாக 15 ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.30 ஆயிரம் வரை விலை பேசி விற்றதும் தெரிய வந்தது.எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் ரூ.15 ஆயிரத்துக்கும், பிளஸ்–2 மதிப்பெண் சான்றிதழ் ரூ.20 ஆயிரத்துக்கும், சென்னை பல்கலைக்கழகத்தின் மதிப்பெண் சான்றிதழ்கள் ரூ.25 ஆயிரத்துக்கும், என்ஜினீயரிங் கல்லூரி சான்றிதழ்கள் ரூ.30 ஆயிரத்துக்கும் விற்பனை செய்துள்ளனர்.10–ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள லோகேஷ் வி கம்ப்யூட்டர்கள் என்ற பெயரில் கம்ப்யூட்டர் சர்வீஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். அவரிடம் இருந்து பத்திரிகையாளர் அடையாள அட்டை ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பெங்களூரைச் சேர்ந்த மேலும் பலரும் போலி சான்றிதழ் புரோக்கர்களாக செயல்பட்டதும் தெரிய வந்தது. அவர்களை பிடிக்கவும் வலை விரிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை