Ad Code

Responsive Advertisement

TNTET Article: அடிப்படை கல்வி மேம்பட அதிக அளவில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுமா?

தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் உள்ளவை அரசு ஆரம்பப் பள்ளிகள். தற்போது உள்ள சூழ்நிலையில் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் தமிழ் வழியோடு, ஆங்கில வழி கல்வியையும் அவசியம் கொண்டு வரவேண்டும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதுபோல் இளம் வயதிலேயே அவனுக்கு ஆங்கில அறிவை ஊட்டிவிட்டால் மாணவர்களது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

 ஆசிரியர் நியமனங்களில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் நிரப்பப்படுகின்றன. அதுபோல் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் மிக அதிக அளவில் நிரப்பினால்தான் காமராஜரின் கல்வித் தாகம் முழுமையாக தீரும். தற்போதுபட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சுமார் 10,726 பெயர்கள் தேர்வுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளன.
           
ஆனால் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30000 பேர்களிலிருந்து வெறும் 2,408 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். இதனால் மீதமுள்ள பணிநாடுநர்கள் வேலைவாய்ப்பு கிடைக்குமா? என்ற கவலையில் உள்ளனர். மேல்நிலைக் கல்வியைப்போல் ஆரம்பக் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். தற்போது தேர்ச்சிபெற்றுள்ள 30 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியலிலிருந்து முதற்கட்டமாக குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேரையாவது பணியமர்த்தவேண்டும். அப்போதுதான் அடிப்படைக் கல்வி மேம்படும்.
     மேலும், தற்போது உள்ள வெயிட்டேஜ் முறையை நீக்கவேண்டும் என்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே பணிநியமனம் இருக்கவேண்டும் என்றும் சில பட்டதாரி ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். அவர்களது வாதப்படி ஆசிரியர் தகுதித் தேர்வை மறுமடியும் எழுதி கூடுதல் மதிப்பெண் பெற்றாலும் பிளஸ்டூ, பட்டப்படிப்பு, பி.எட் போன்றவற்றை மீண்டும் எழுத முடியாத சூழல் உள்ளதால் வெயிட்டேஜ் மதிப்பெண் பெறுவது எப்போதுமே இயலாத காரியம். இதனால் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் இடம் பெற வாய்ப்பில்லை. எனவேதான் வெயிட்டேஜ் முறையை நீக்கவேண்டும் என்று போராடுகின்றனர்.
     பிளஸ்டூ பாடத்திட்டம் தற்போதுள்ள முறை வேறு. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை வேறு. தற்போது கல்வி பயில உள்ள வசதிகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு இல்லை. தொழிற்கல்வி பாடம் படிக்கும் பிளஸ்டூ மாணவனுக்கு செய்முறை மதிப்பெண்கள் அதிக அளவில் வழங்கப்படுகிறது. ஆனால் ஏ குரூப் எனும், கணிதம், உயிரியல்,இயற்பியல், வேதியியல் பாடம் படித்த மாணவர்கள் குறைவான மதிப்பெண்ணைத்தான் பெற முடியும். இரு பிரிவு மாணவர்களையும் சம அளவு கோலில் பார்க்கக்கூடாது எனவும் தேர்வர்கள் கூறுகின்றனர்.
     வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பதிந்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் வயது முதிர்ந்த ஆசிரியர்கள் தற்போது படித்து தேர்ச்சி பெற்ற புதிய பட்டதாரி ஆசிரியர்களுடன் எவ்வாறு போட்டி போட இயலும்? எந்த ஒரு பணி நியமனத்திலும் இதுபோன்ற ஒரு முறை கடைபிடிக்கப்படுவதில்லை. இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் மட்டும் இந்த முரண்பாடு ஏன்? வேலைவாய்ப்பு பதிவு எதற்காக? வயது முதிர்வுக்கு சலுகை கிடையாதா? என்றும் தேர்வர்கள் கோருகின்றனர். என்சிடிஇ வழிகாட்டுதலில் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்ணை மட்டுமே கணக்கிடும்படி கூறப்பட்டுள்ளது. பிளஸ்டூ, பட்டப்படிப்பு, பி.எட் மதிப்பெண்களை கணக்கெடுக்கும்படி கூறப்படவில்லை.
     சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்டதால் மீண்டும் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு சரிபார்க்க கால அவகாசம் இல்லை.

தீர்வு என்ன?
1.   ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை உறுதி என்ற உத்தரவாதத்தை அரசு அறிவிக்கவேண்டும்.
2.   மொத்த காலிப் பணியிடங்களை சரிபாதியாக பிரித்து முதல் பாதியை ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்ற அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும், மறு பாதியை ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண்களுக்கு மேல் 89 மதிப்பெண்களுக்குள் பெற்று தேர்ச்சி பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினர்களில் அதிக மதிப்பெண் மற்றும் வயது மூப்பு அடிப்படையில் வயது முதிர்ந்த ஆசிரியர்களுக்கும் வழங்கவேண்டும்..
தாள் 1, தாள் 2 தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் பணியமர்த்தும்வரை இந்த முறை கடைப்பிடிக்கவேண்டும்.
இவ்வாறு நடைமுறைப்படுத்துவதுதான் இரு சாராரையும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement