Ad Code

Responsive Advertisement

பொதுத் தேர்வில் தேர்ச்சி குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் அமைச்சர் வீரமணி ஆலோசனை நடத்த உள்ளார்

பொதுத் தேர்வில் தேர்ச்சி குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் அமைச்சர் வீரமணி ஆலோசனை நடத்த உள்ளார். ஆகஸ்ட் 13 முதல் 8 மண்டலங்களில் இந்தக் கூட்டம் நடக்கவுள்ளது.

அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கச் ெசய்வதற்காக அடுத்த மாதம் 13-ம் தேதி முதல் செப். 1-ம் தேதி வரை 8 கட்டங்களாக மண்டல அளவில் கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமையாசிரியர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், பெரும்பாலான அரசுப் பள்ளிகள் முழுத் தேர்ச்சி அடைவதில்லை. இதையடுத்து, பொதுத் தேர்வுகளில் 70 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, அவற்றைக் களைய கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, தமிழக மாவட்டங்களை 8 மண்டலங்களாகப் பிரித்து, அடுத்த மாதம் 13-ம் தேதி முதல் செப். 1-ம் தேதி வரை மாவட்ட கல்வி அலுவலர்கள், தேர்ச்சி குறைந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கலந்து கொள்ளும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கல்வித் துறை செயலர், சார்புச் செயலர், இயக்குநர், கூடுதல் இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்க உள்ளனர்.
எனவே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பள்ளித் தலைமையாசிரியர்கள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் மண்டலத்துக்குட்பட்ட வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டம் ஆக. 13-ல் திருவள்ளூரிலும், காஞ்சிபுரம், விழுப்புரம், கிருஷ்ணகிரி, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டம் ஆக. 14-ல் விழுப்புரத்திலும், கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டம் ஆக. 18-ல் தஞ்சாவூரிலும் நடைபெறவுள்ளது. இதேபோல, திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டம் ஆக. 19-ல் புதுக்கோட்டையிலும், திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டம் ஆக. 20-ல் திண்டுக்கல்லிலும், தருமபுரி, நாமக்கல், கரூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டம் ஆக. 21-ல் கரூரிலும் நடைபெறவுள்ளது.
கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டம் ஆக. 22-ல் கோவையிலும், தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டம் செப். 1-ல் தூத்துக்குடியிலும் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement