Ad Code

Responsive Advertisement

ஐ.ஏ.எஸ்., கனவை நனவாக்கும் அரசு மையங்கள்!

ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான பயிற்சி மையங்கள், மூலைக்கு மூலை கணக்கின்றி முளைத்து கிடக்கின்றன. பயிற்சி பெறுவோருக்கு அதிக கட்டணம், பயிற்றுனர்களுக்கும் அதிக சம்பளம், எனும் போது. 'ஏழைகளால், அதுவும் பெண்களால் என்ன செய்ய முடியும்?'

இந்த விம்மலுக்கு விடிவாக, 2001ல் பிறந்தவைதான், சென்னை ராணி மேரி கல்லுாரியிலும், மதுரை அருள்மிகு மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரியிலும், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு மற்றும் பிற மத்திய பணிகளுக்கான தேர்வுகளுக்கு, மகளிருக்கென சிறப்பு இலவசப் பயிற்சி வகுப்புகள்.அவை எப்படி செயல்படுகின்றன?இடம்: ராணி மேரி கல்லுாரி, சென்னை.

பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், வரலாற்று துறை தலைவருமான அமுதா கூறிய தாவது:குடிமை பணிகளுக்கு, முதன்மை தேர்வும், பிரதான தேர்வும் நடக்கும். இங்கு, முதன்மை தேர்வுக்கான வகுப்புகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. ஏழை மாணவியர் பயன்பெற வேண்டும். தமிழகத்தில் இருந்து, நிறைய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வரவேண்டும்என்பதே, எங்கள் நோக்கம்.தமிழக அரசின், செய்தி ஒலிபரப்பு துறை சார்பில் பயிற்சிக்கான விளம்பரம், செய்தி தாள்கள் வழியே, ஒவ்வொராண்டும்வெளியிடப்படும்.மாணவர்கள் இருநுாறு ரூபாய்க்கான வரைவோலையை, 'முதல்வர், ராணி மேரிகல்லுாரி, சென்னை' என்ற முகவரிக்கு மாற்றும் வகையில் அனுப்ப வேண்டும்.இந்த பயிற்சி வகுப்பில் சேர, 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். 30 வயதுவரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு மூன்று வயதும், தாழ்த்தப்பட்ட/பழங்குடி இனத்தவருக்கு ஐந்து வயதும் தளர்வு உண்டு. மாணவியருக்கு, எழுத்து தேர்வும், நேர்முக தேர்வும் உண்டு. அறுபது மாணவியர் தேர்ந்தெடுக்கப்படுவர். பயிற்சி, ஆறு மாதங்கள் நடக்கும்.

இங்கு, தினசரி, மாதாந்திர அறிவுப்பூர்வமான இதழ்களும், 4,000 புத்தகங்களையும் கொண்ட நுாலகம், நகல் எடுக்கும் வசதி, பழமையான, கேலரி வகுப்பறைகள் உள்ளன. தினமும், இரண்டு மணி நேரம் என்ற அளவில், மூன்று பாடவேளைகள் செயல்படும்.தமிழகத்தில், இரண்டே இடங்களில் பயிற்சி வகுப்பு கள் உள்ளதால், தென் மாவட்டங்களில் இருந்தும், இங்கு அதிக அளவில் மாணவியர் வருவர். சேர்க்கையில், போட்டி கடுமையாக இருக்கும். கலை, அறிவியல் பட்டதாரிகள் மட்டுமின்றி, மருத்துவம், பொறியியல்பட்டதாரிகளும் வருவர்.புவியியல், இந்திய அரசியல், வணிகவியல், இயற்பியல், நடப்பு நிகழ்வியல், உயிரியல், திறனறிதல், சமூகவியல் உள்ளிட்ட அனைத்து பாடங்களுக்கும், அனுபவமும், திறமையும் உள்ள ஆசிரியர்கள் உள்ளனர். பாடம், ஆங்கில வழியில் போதிக்கப்படும். தமிழ் வழி படித்து வரும் மாணவியருக்கு சிறப்பு கவனமும் உண்டு.இதுவரை, எங்கள் மாணவியர், பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வாகி உள்ளனர்.இவ்வாறு, அமுதா தெரிவித்தார்.

அதேநேரம் அவர் சில கோரிக்கைகளையும் முன்வைத்தார்:முதன்மை தேர்வுக்கு மட்டுமே பயிற்சி என்பதால், மாணவியரால், பிரதான தேர்வுக்கு பணம் செலுத்தி, வெளியிடங்களில் படிக்க முடியவில்லை. அவர்களை தொடர்ந்துகண்காணிக்கவும் முடியவில்லை.ஆண்டில், ஆறு மாதமே பயிற்சி என்பதால், பலருக்கு, படிப்பில் ஒரு தொய்வு உண்டாகிறது. தமிழகத்தின் தென்பகுதியில் இருந்து வரும் மாணவிகள், விடுதி வசதி இல்லாத தால், பாதியிலேயே நின்று விடுவதும்நிகழ்கிறது.
எனவே, பிரதான தேர்வுக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும். பயிற்சி வகுப்புக்கென தனி கட்டடம், கழிப்பறை, குடிநீர் வசதி வேண்டும். பயிற்றுனருக்கான ஊக்கத்தொகையை, 750 ரூபாயில் இருந்து, உயர்த்தி தர வேண்டும். இவை எல்லாம் கிடைத்தால், முழு மூச்சாக இறங்கி, பல ஏழைகளின் கனவுகளை நிஜமாக்க வாய்ப்பிருக்கிறது.மாணவியர், யு.பி.எஸ்.சி., முதல்நிலை தேர்வில், இதுவரை 16 பேரும், டி.என்.பி.எஸ்.சி., குரூப் ௧, 2ல், தலா 21 பேரும், குரூப் 4ல் 5 பேரும், வங்கி தேர்வுகள் உள்ளிட்ட மற்ற தேர்வுகளில் 83 பேரும் தேர்வாகி, பணிக்கு சென்றிருப்பதாக பெருமையாக கூறியிருக்கின்றனர்.பல மாணவியர், தேர்வான பின்பு, தொடர்பு கொள்வதில்லை என்பது வருத்தமான உண்மை.இவ்வாறு அமுதா தெரிவித்தார்.

பல்வேறு தனியார் பயிற்சி மையங்களிலும், ராணி மேரி கல்லுாரியிலும் பயிற்றுனராக இருக்கும், பாலசந்திரன், அவற்றின் வேறுபாடுகளை பட்டியலிட்டார் இப்படி.நான், இரண்டுமுறை , ஐ.ஏ.எஸ்., முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று, பிரதான தேர்வில் தேர்ச்சியடைய பயிற்சி எடுத்துட்டு இருக்கேன். முனைவர் பட்ட படிப்புக்காகவும் தயாராகிட்டு இருக்கேன்.நான், தனியார் போட்டி தேர்வு மையங்களிலும், ராணி மேரி கல்லுாரியிலும், வணிகவியல், இந்திய அரசியல் பாடங்களை, நடத்திட்டு இருக்கேன்.தனியார் பயிற்சி மையங்களில், சம்பளம் ரெண்டு மடங்கு அதிகம். அதே நேரம், நமக்கான கட்டுப்பாடுகள் அதிகம்.அரசு மையத்தில், மாணவியருக்கு ஆர்வம், குழு மனப்பான்மை, சந்தேகம் கேட்டல் ஆகிய குணங்கள் நிறைய உண்டு. ஆங்கிலப் புலமை மட்டுமே குறைவு.தனியார் மையங்களில், நாற்பதாயிரம் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை மாணவர்கள் செலுத்துவதால், பெரும்பாலான மாணவர்கள், ஆசிரியர்களுடன் இயல்பாக இருக்கமாட்டார்கள்.ஆனால் அரசு மையங்களில் அப்படி அல்ல.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement