Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 கணித விடைத்தாள் நகல்களில் 4 பக்கங்கள் மாயம் - ஐகோர்ட் உத்தரவு

பிளஸ் 2 கணித விடைத்தாள் நகல்களில் 4 பக்கங்கள் மாயமானதால், கூடுதல் மதிப்பெண் வழங்க அரசுத் தரப்பு ஒப்புக்கொண்டது. மனுதாரரின் மகனுக்கு பொறியியல் மாணவர் சேர்க்கையில், ஒரு இடம் ஒதுக்க அண்ணா பல்கலைக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பொன்னுச்சாமி தாக்கல் செய்த மனு: எனது மகன் பிரகாஷ், பிளஸ் 2 தேர்வில் 1080 மதிப்பெண் பெற்றார். ஆங்கிலம், கணிதம், வேதியியல், கம்ப்யூட்டர் அறிவியல் விடைத்தாள் நகல்கள் கோரி, அரசுத் தேர்வுகள் துறைக்கு விண்ணப்பித்தார். இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ததில், கணிதம் தவிர பிற பாடங்களுக்கு நகல்கள் கிடைத்தன. கணித விடைத்தாள் நகல் கோரி, புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலரிடம் பிரகாஷ் விண்ணப்பித்தார். கணிதத்தில் 44 பக்கங்கள் விடையளித்திருந்தார். ஆனால், கல்வி அலுவலகம் மூலம் வழங்கிய விடைத்தாள் நகலில், பக்கம் 35 முதல் 38 வரை காணவில்லை. மொத்தம் 100 மதிப்பெண்ணிற்குரிய 10 மதிப்பெண் கேள்விகளுக்கு விடையளித்திருந்ததில், 97 மதிப்பெண் வழங்கியுள்ளனர். 6 மதிப்பெண்ணிற்கு உரிய, 10 கேள்விகளுக்கு 56 மதிப்பெண், மொத்தம் 153 மதிப்பெண் வழங்கியுள்ளனர். கேள்விகளுக்கு விடையளித்ததில் தவறு இருந்தால்
பூஜ்ஜியம் (0), விடையளிக்காமல் இருந்தால் வெறும் கோடு (-) ஆகியவற்றை அடையாளமாக, விடைத்தாள் முதல் பக்கத்தில் குறிப்பிடுவர். பிரகாஷ், 40 மதிப்பெண்ணுக்கு உரிய ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு விடை அளித்திருந்தார். ஆனால், 'விடை அளிக்கவில்லை' என, பூஜ்ஜியம் இட்டுள்ளனர். இதனால் பிரகாஷிற்கு தகுந்த மதிப்பெண் கிடைக்கவில்லை.
40 வினாக்களுக்கு விடை அளித்துள்ளதை மதிப்பீடு செய்து, மதிப்பெண் வழங்கவும், பொறியியல் 'கவுன்சிலிங்' தரவரிசைப் பட்டியலில் எனது மகனின் பெயரை சேர்க்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி கே.கே.சசிதரன் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் கணபதி சுப்பிரமணியன் ஆஜரானார். அரசுத்தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், '35 முதல் 38 பக்கங்கள் மாயமாகிவிட்டன. காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மனுதாரரின் மகனுக்கு, 153 க்கு பதிலாக 193 மதிப்பெண் வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது. நீதிபதி உத்தரவு: விடைத்தாள் நகலில் 4 பக்கங்கள் மாயமானதை அரசுத்தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது. பதிலாக 193 மதிப்பெண் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளதால், மனுதாரர் திருப்தி அடைந்துள்ளார். புதிய மதிப்பெண் அடிப்படையில், மனுதாரரின் மகனுக்கு இடம் ஒதுக்க, சென்னை அண்ணா பல்கலை பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மனு 'பைசல்' செய்யப்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement