Ad Code

Responsive Advertisement

பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை

அனைத்துப் பள்ளிகளிலும், அனைத்து நிலைகளிலும் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.


          தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நாகை மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம் நாகையில் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் ஜெயபால், ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் அசோக்குமார் சங்கத்தின் செயல்பாடுகளை விளக்கிப் பேசினார்.

          உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லாப் பொருள்கள் வழங்கும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதைத் தவிர்த்து, விலையில்லாப் பொருள்கள் விநியோகத்துக்குத் தனி அலுவலர் நியமிக்கக் கோருவது. பட்டதாரி ஆசிரியர் நியமன எண்ணிக்கைக்கு ஏற்ப பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட 50% பதவி உயர்வு மறுக்கப்படுவதை பலமுறை சுட்டிக்காட்டியும் கல்வித் துறை கவனத்தில் ஏற்கவில்லை. எனவே, கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் மற்றும் அளிக்கப்பட்ட பதவி உயர்வு குறித்து கல்வித் துறை வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்துவது.
ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை ஒளிவுமறைவற்ற முறையில் நடத்தவும், இரவு நேர கலந்தாய்வுகளைத் தவிர்த்து அனைத்து கலந்தாய்வுகளையும் பகல் நேரத்தில் நடத்தவும் வலியுறுத்துவது. அனைத்துப் பள்ளிகளிலும், அனைத்து நிலைகளிலும் உள்ள ஆசிரியர் மற்றும் அலுவலர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோருவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் தலைமையிடச் செயலாளர் சங்கர், வட்டப் பொறுப்பாளர்கள் லூயிஸ், ஆரோக்கியசாமி, ஜரோன், யாசின் மற்றும் மாவட்ட, வட்ட நிர்வாகிகள், பொதுக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement