Ad Code

Responsive Advertisement

பகலில் பாடம்... இரவில் மதுபானக்கூடம் : பாதுகாவலர் நியமனம் எப்போது?

பொழுதுபோக்கு இடமாகவும், மது அருந்தும் கூடாரமாகவும் அரசுப்பள்ளிகள் பயன்படுத்தப்படுவது தொடர்கதையாகி வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது; இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு பள்ளிகளுக்கு கட்டாயம் இரவு பாதுகாவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு ஆதாரமாக அரசு பள்ளிகள் விளங்குகின்றன. கல்வித்தரம், பள்ளியின் கட்டமைப்பு, விளையாட்டு வசதி மற்றும் அடிப்படை வசதிகள் போன்றவைகளை கருத்தில் கொண்டே பெற்றோர் தங்களின் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
அரசுப்பள்ளிகள் பாதுகாப்பில்லாமல் இருப்பதே அவை பெற்றோரால் தவிர்க்கப்படுவதற்கு முதன்மை காரணமாக உள்ளது. கல்வித்தரத்தை உயர்த்த ஆங்கில வழிக்கல்வி, ஆசிரியர்களுக்கு பயிற்சி போன்ற பல்வேறு வழிமுறைகளை அரசு நடைமுறைபடுத்தியுள்ளது.
எனினும், பள்ளி வளாகம் பல்வேறு சமூக விரோதச்செயல்களுக்கு பயன்படுவதை தவிர்க்க முழுமையான நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.
இதனால் பள்ளி வளாகத்திற்கு சீர்கேடு உண்டாவது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மாணவர்களின் பாதுகாப்பிற்கு நிச்சயம் இல்லாத அரசுப்பள்ளிகளை புறக்கணிக்கின்றனர் பெற்றோர்.
அரசுப்பள்ளிகளுக்கு இரவு பாதுகாவலர் நியமிப்பதன் மூலம் பள்ளி வளாகம் பாதுகாக்கப்படுவதோடு, அரசுப்பள்ளிகளின் மீது நம்பிக்கை ஏற்படும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை, பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகளில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர். அரசுப்பள்ளிகள் இரவு நேரங்களில் மதுக்கூடாரமாகவும், சீட்டாட்டம் போன்றவற்றை விளையாடு இடமாகவும் மாறி வருவது இப்பகுதி அரசு பள்ளிகளில் தொடர்கதையாக உள்ளது.
இவற்றில் பெரும்பாலும் கிராமப்புற அரசுப்பள்ளிகளே பாதிக்கப்பட்டுள்ளன. பல கனவுகளோடு பள்ளிக்கு வரும் மாணவர்கள் பாட்டில்களை சுத்தம் செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
சில பள்ளிகள் காலை நேரங்களிலேயே பொழுதுபோக்கு இடமாக பயன்படுத்தப்படுகிறது. போலீசாரிடத்தில் பள்ளி ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இரவு நேரங்களில் போலீசார் மூலம் பள்ளிகள் கண்காணிக்கப்படுகிறது.
இருப்பினும், இவை தற்காலிகமாகவே உள்ளதால் மீண்டும் பள்ளியின் அக்கம் பக்கத்து ஆசாமிகள் தங்களின் வேலையை காட்ட துவங்குகின்றனர். இரவு பாதுகாவலர்கள் நியமிப்பதே இதற்கு நிரந்தர தீர்வாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அரசு பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது:
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இரவு பாதுகாவலர்கள் பணியிடம் இருந்தும் பல ஆண்டுகளாக ஏராளமான பள்ளிகளில் அவை நிரப்பப்படாமல் உள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளிகளே பொறுப்பு என பெற்றோர் எண்ணி குழந்தைகளை பள்ளியில் விட்டுச்செல்கின்றனர். இந்நிலையில் பாதுகாவலர் இல்லாத பள்ளிகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்களே அப்பணியையும் சேர்த்து செய்து வருகின்றனர். இதனால் பாடமும் நடத்த முடியாமல், மாணவர்களை முழு நேரமும் கண்காணிக்க முடியாமல் திணறுகின்றனர்.
அரசு பள்ளிகள்தானே என எண்ணியே பலரும் பல்வேறு செயல்களுக்கு பள்ளி வளாகத்தை பயன்படுத்துவதால், இன்று பல பள்ளிகளுக்கும் கேட்பாரற்று கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளை தரம் உயர்த்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள கல்வித்துறை பள்ளியை பாதுகாக்க இரவு காவலர்களை நியமிப்பதற்கு எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் இருப்பது மேலும் வேதனைப்படுத்துகிறது.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்பவும் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும் காவலர்களை நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இது குறித்து மக்கள் கருத்து

அபிலாஷ், தனியார் நிறுவன மேலாளர், பொள்ளாச்சி:

பக்திக்கும் மரியாதைக்கும் உரியது பள்ளி மைதானம். அதனுள் நுழைந்தாலே மரியாதை கலந்த உணர்வு ஏற்பட வேண்டும். ஆனால், நம் பகுதியில் உள்ள பெரும்பாலான அரசுப்பள்ளி மைதானங்களில் நுழைந்தால், முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளை காணலாம்.
சிதறிக்கிடக்கும் மது பாட்டில்களில் இருந்து, போதைப்பொருட்களை உபயோகித்த தடயங்கள் வரை மிக எளிதில் காணக்கிடைக்கின்றன. இதற்கு காரணம் பெரும்பாலான அரசுப்பள்ளி வளாகங்கள் இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிப்போய் விட்டது தான்.
அரசு பள்ளிகளில் இரவு காவலர்களை நியமிக்காமல் இருப்பதால் இது போன்ற அவலங்கள் நிலவி வருகின்றன. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்தால், கல்விச்சாலைகள் களங்கப்படுவதை தவிர்க்கலாம்.

பிரபு, தனியார் நிறுவன பணியாளர், கருப்பம்பாளையம்:
இரவு நேரத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பான பதுங்கும் இடமாக இருப்பது அரசுப்பள்ளிகள் தான். காரணம், அங்கு இரவு நேர காவலர்கள் இல்லாதது தான். இதை பயன்படுத்திக்கொண்டு, பள்ளி மைதானங்களை பல்வேறு விரும்பத்தகாத செயல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
பகலில் சென்று ஆராய்ந்தால் அதற்கான தடயங்களை காண முடியும். இதை தவிர்க்க பள்ளிகளை பூட்டி வைப்பதை பல பள்ளிகளில் பின்பற்றுகின்றனர். இதனால் மாணவர்கள் அதிகாலையில் சென்று விளையாட்டு பயிற்சி பெறுவது, உடற்பயிற்சி செய்வது போன்ற ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு பள்ளி மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதைத்தவிர்க்க, அரசு பள்ளிகளுக்கு இரவு நேர காவலர்கள் நியமனம் அவசியமாகிறது. அதற்கான நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள்.

முத்துகிருஷ்ணன்,பெத்தநாயக்கனூர்.
அந்த காலத்தில் பள்ளிகள் என்பது கோவிலுக்கு இணையாக கருதப்பட்டது. தற்போது பகல் நேரங்களில் பள்ளிக்கூடமாகவும், இரவு நேரங்களில் மதுப்பானக்கூடமாகவும் மாறிவருகிறது. இந்த சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தில் அத்துமீறி நுழைவது மட்டுமின்றி பள்ளியின் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படுத்துகின்றனர். அவர்களிடம் இருந்து பள்ளி சொத்துக்களை பாதுகாக்க பள்ளிகளுக்கு இரவு காவலர்களை அரசு நியமிக்க வேண்டும். இரவு நேரங்களில் பள்ளி மற்றும் அரசு கட்டடங்களை போலீசார் கண்காணிப்பது அவசியம்.
மணிகண்டன், சோமந்துைற
பள்ளிகள் வருங்கால இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்கும் நாற்றங்கால்கள், அங்கு பயிலும் மாணவர்களின் பாதுகாப்பில் மெத்தனம் காட்டுவது தவறு. பள்ளிகளில் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கின்றன.
இரவுக்காவலர்கள் இல்லாத பள்ளிகள், விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ மாணவியரின் பாதுகாப்பு எவ்வளவு தூரம் நம்பகத்தன்மை கொண்டது என்பதை பொள்ளாச்சி விடுதி சம்பவம் எடுத்துக்காட்டும். எனவே பள்ளிகளின் பாதுகாப்பு என்பது அரசால் உறுதி செய்யப்பட வேண்டும்.
அனைத்துப்பள்ளிகளிலும் இரவு காவலர்கள் நியமிக்க வேண்டியது அவசியமானது மட்டுமல்லாது அத்தியாவசியமானதும் கூட ஆகும்.

சசிகலா, உடுமலை:
அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவதற்கு, பள்ளிகளில் பாதுகாப்பு குறைவாக இருப்பதும் முக்கிய காரணம். பள்ளிகள் பொழுதுபோக்கு இடமாக பயன்படுத்துவதுடன், வகுப்பறைகளை சேதப்படுத்துவது, வளாகத்தை அசுத்தப்படுத்துவது போன்ற செயல்களையும் செய்கின்றனர். பல மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஆதாரமாக உள்ள அரசுப்பள்ளிகளை பாதுகாக்க கல்வித்துறை கட்டாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு பாதுகாவலர்களை நியமிப்பதன் மூலம் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதை தவிர்க்கலாம்.

பிருந்தாதேவி, உடுமலை:
பெரும்பாலான அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பு, ஏற்கனவே சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இதில் குடிமகன்களால் மீண்டும் சேதப்படுத்தப்படும் போது கட்டமைப்புகள் முற்றிலுமாகவே பாதிப்படையும் நிலை ஏற்படும். மேலும், பள்ளிக்குழந்தைகளுக்கு எதிரான சம்பவங்களுக்கு, ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், பள்ளி வளாகம் பாதுகாப்பான நிலையில் இருந்தால் மட்டுமே மாணவர்கள் பாதுகாப்புடன் இருக்க முடியும். இதற்கு ஒவ்வொரு அரசுப்பள்ளியிலும் பாதுகாவலர்கள் நியமிக்க வேண்டும்.

சத்தியநாதன்,தேவராடிபாளையம்:
அரசு மேல்நிலைப்பள்ளிகளில், மாணவ, மாணவியர் சேர்க்ககை அதிகரித்துள்ளது. அதற்கான புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. சுற்றுச்சுவர் கட்டப்பட்டு, இரும்புக்கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இரவு நேரங்களில் பள்ளியை பாதுகாக்க இரவு காவலர்கள் தற்போது இல்லை. இதனால், அரசின் பொருட்களை பாதுகாப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்திற்காக, சைக்கிள் உப பொருட்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டு, அசம்பிள்
செய்யப்படுகிறது.
இந்த சைக்கிள்கள் வெளியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனை பாதுக்காகவும், பள்ளி வகுப்புகளில் உள்ள பொருட்களை பாதுகாக்கவும், சமூக விரோதிகள் உள்ளே வருவதை தடுக்கவும், இரவுக்காவலர் நியமிக்கப்பட்டால் தான் நிரந்தர தீர்வு காண முடியும். இதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுரேஷ் (இசை ஆசிரியர்),வால்பாறை
வால்பாறை மலைப்பகுதியில் மொத்தம் 93 பள்ளிகள் உள்ளன. இதில் பெரும்பாலான பள்ளிகளுக்கு காம்பவுண்டு சுவர் இல்லாத நிலையில், பள்ளி பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக வால்பாறை நகரில் அமைந்துள்ள அரசுப்பள்ளிகளில் இரவுக்காவலர் பணியிடம் காலியாக இருப்பதால், இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தில் சமூகவிரோதிகள் நுழைந்து, பள்ளிகளை திறந்தவெளி பாராக மாற்றி வருகின்றனர். இதனால், அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குபோதிய பாதுகாப்பு இல்லாத நிலை நீடித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் அனைத்துப்பள்ளிகளுக்கு இரவுக்காவலர் நியமிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement