Ad Code

Responsive Advertisement

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தமிழக வீரர் சிவலிங்கம் தங்க பதக்கம் வென்றுள்ளார் - வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்


காமன்வெல்த் 4 வது நாள், விளையாட்டுப் போட்டிகளில், 77 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சதீஸ் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதே எடைப்பிரிவில் இந்தியாவின் ரவி கட்லு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.


22 வயதான சதீஸ் சிவலிங்கம் 149 மற்றும் 179 ஆகிய எடைகளை தூக்கி முதலிடத்தைப் பிடித்தார். கடந்த 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியிலும் இவர் தங்கப் பதக்கம் பெற்றிருந்தார். அதேபோல் ரவி கட்லு 142 மற்றும் 175 கிலோ எடைகளை தூக்கி வெள்ளிப் பதக்கத்திற்கு முன்னேறினார்.

முன்னதாக நடைபெற்ற மகளிர் 63 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் பூனம் யாதவ் வெண்கலப்பதக்கம் வென்றார். ஸ்நாட்ஜ் மற்றும் க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவுகளில் மொத்தம் 202 எடையைத் தூக்கி பூனம் யாதவ் வெண்கலம் வென்றார். இந்தப்பிரிவில் சிறப்பாக செயல்பட்ட நைஜீரிய வீராங்கனைகளான ஏடென்ஸ்மி தங்கப் பதக்கத்தை வென்றார்.
சதீஷ் பெருமிதம்...
காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் 77 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்ற வேலூரை சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் பெருமிதத்துடன் கூறும்போது, ''காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கம் வெல்வதற்காக இரண்டரை ஆண்டுகளாக தீவிர பயிற்சி எடுத்து வந்தேன். ஆசிய விளையாட்டுப் போட்டி, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே எனது அடுத்த லட்சியம். அரசின் உதவி, ஊக்கம் இருந்தால் பல திறமையான வீரர்கள் உருவாகுவார்கள். பயிற்சியாளர் உதவியுடன் முறையாக பயிற்சி எடுத்தால் வெற்றி பெறலாம்" என்றார்.

சதீஷ் பெற்றோர் மகிழ்ச்சி...

மகன் சதீஷ் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக வேலூர் சத்துவாச்சாரியில் வசிக்கும் சதீஷின் பெற்றோர் சிவலிங்கம்-தெய்வானை தெரிவித்துள்ளனர். மேலும், சதீஷுக்கு, அர்ஜுனா விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க சதீஷ் தேர்வு பெற்றுள்ளதாக கூறிய அவரது பெற்றோர், ஒலிம்பிக்கிலும் சதீஷ் தங்கம் வெல்வார் என நம்பிக்கை உள்ளது என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement