Ad Code

Responsive Advertisement

சிவில் சர்வீசஸ் தேர்வில் மாற்றம் செய்ய மத்திய அரசு உறுதி

இந்திய ஆட்சிப்பணிகள் என அழைக்கப்படும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான, சிவில் சர்வீசஸ் தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., நிறுவனம் நடத்தி வருகிறது. இதற்கான தேர்வு, ஆகஸ்ட் 24ல் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வை கடந்த ஆண்டு எழுதிய மாணவர்கள், சிசாட் - 2 கேள்வி தாள், மிகவும் கடினமாக இருப்பதாகவும், ஆங்கில புலமை உள்ளவர்களால் தான் அந்தத் தேர்வில் வெற்றி பெற முடியும் என்றும் கருதினர்.அதனால், கடந்த சில மாதங்களாகவே, இந்த தேர்வு முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என, அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசின் அமைச்சர்கள் மற்றும் இப்போதைய பா.ஜ., கூட்டணி அரசின் அமைச்சர்களையும் சந்தித்து வருகின்றனர்.


எனினும், அந்த தேர்வு முறையில் மாற்றம் செய்வது குறித்து, அரசு, எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளதால், மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த விவகாரம், நேற்று பார்லிமென்ட்டில் பெரிய அளவில் எதிரொலித்தது. லோக்சபாவில், கேள்வி நேரம் ஆரம்பித்தபோது, சில உறுப்பினர்கள் பிரச்னையை எழுப்பினர். எனினும், பெரிய அளவில் விவாதங்கள் நடைபெறவில்லை.ஆனால், ராஜ்யசபாவில் இந்த விவகாரத்தை, காங்கிரஸ், சமாஜ்வாதி, தி.மு.க., திரிணமுல், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கிளப்பின. கோஷங்கள் எழுப்பியும், ஆர்ப்பாட்டம் செய்தும், அக்கட்சிகள், இந்த விவகாரத்தை எழுப்பின.இதனால், இரண்டு முறை சபை ஒத்திவைக்கப்பட்டு, 'ஜீரோ' நேரத்தின் போது, சபை மீண்டும் கூடியது.

விவாதத்திற்கு பதிலளித்து, மத்திய பணியாளர், பென்ஷன் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை அமைச்சர், ஜிதேந்திர சிங் பேசியதாவது:முக்கியமான பிரச்னை இது. இது குறித்து விவாதிக்க, முந்தைய அரசால், ஏற்கனவே மூன்று நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு, அறிக்கை அளிப்பதற்குள், தேர்தல் வந்துவிட்டது.இப்போது எங்களின் புதிய அரசு வந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் அந்தக் குழு அறிக்கை அளித்து விடும். அதன் பின், இவ்விஷயத்தில் அரசு முக்கிய முடிவை எடுக்கும்.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன், பேச்சுவார்த்தை நடக்கிறது. மொழியின் பெயரால், மாணவர்கள் யாரும் பாதிக்கப்பட அனுமதிக்க மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தேர்வர்கள் கோருவது என்ன?

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வு, முதல் நிலை தேர்வு, முக்கிய தேர்வு, நேர்முக தேர்வு ஆகிய மூன்று கட்டங்களாக நடத்தப் படுகிறது. முதல் நிலை தேர்வில் தான் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என, மாணவர்கள் விரும்புகின்றனர்.முதல் நிலை தேர்வில், 'சிவில் சர்வீசஸ் ஆப்டிடியூட் டெஸ்ட்' எனப்படும், 'சிசாட்' தேர்வு உள்ளது. தலா, 200 மதிப்பெண்களை கொண்ட, சிசாட் - 1 மற்றும் சிசாட் - 2 ஆகிய கேள்வி தாள்களுக்கு, மாணவர்கள் பதில் எழுத வேண்டும். சிசாட் - 2 தேர்வில் தான், மாற்றம் செய்ய வேண்டும் என்பது, மாணவர்கள் கோரிக்கை. அந்த வினாத்தாளில், ஆங்கில காம்ப்ரஹென்ஷன், லாஜிக்கல் ரீசனிங், அனலிட்டிகல் எபிலிட்டி, மென்டல் எபிலிட்டி, பேசிக் நியூமரசி போன்ற கடினமான, அதிக ஆங்கில புலமை உள்ளவர்களால் மட்டுமே எழுத முடியும் வகையிலான வினாக்கள் உள்ளதாக, மாணவர்கள் கூறுகின்றனர். அதை, தமிழ், இந்தி போன்ற வட்டார மொழிகளில் எழுதும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்பது தான், மாணவர்களின் விருப்பம்.

கடந்த 2010ல், தமிழகத்தில், 110 பேர், சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்வாகி இருந்த நிலையில், அதன் பிறகு எண்ணிக்கை குறைந்துள்ளது. அதற்கு, இந்த தேர்வில் பின்பற்றப்படும் புதிய நடைமுறையே காரணம். கிராமப்புற மாணவர்களும் எழுதும் வகையில், தேர்வு அமைய வேண்டும்; தமிழில் கேள்விகள் இருக்க வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement