Ad Code

Responsive Advertisement

நடமாடும் அங்கன்வாடி சேவைகள்...அமைச்சர் அறிவிப்பு...

புலம்பெயர்ந்து வாழும் கூலித் தொழிலாளர்களுக்காக 5 மாவட்டங்களில் நடமாடும் அங்கன்வாடி சேவைகள் வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்த்தி அறிவித்தார்.


சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை அமைச்சர் பா.வளர்மதி வெளியிட்ட அறிவிப்புகள்:

கட்டட வேலை மற்றும் பிற வேலைகள் காரணமாக ஒரு மாவட்டத்தில் இருந்து இதர மாவட்டங்களுக்கு கூலித் தொழிலாளர்கள் செல்கின்றனர். அதைப்போல பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குப் புலம்பெயர்ந்தும் வருகின்றனர். அப்படி வருபவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி வளாகக் கட்டடங்கள், கட்டுமானப் பகுதி, செங்கல்சூளை, சாலையோரம், தெருவோரம், நடைபாதை, தொடர்வண்டி, பேருந்து நிலையம், நகர்ப்புற குடிசைப் பகுதிகள் மற்றும் நகராட்சி மற்றும் மாநகராட்சியில் உள்ள ஆற்றோரங்களில் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர்.

அந்தக் குடும்பங்களில் உள்ள குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களிடையே மிதமான மற்றும் கடுமையான ஊட்டச்சத்துப் பற்றாக்குறை உள்ளது.

இதைத் தடுக்கும் பொருட்டு, அந்த மக்களுக்கு அங்கன்வாடி சேவைகள் வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

அதன்படி ஒரு மாவட்டத்துக்கு இரண்டு ஊர்திகள் மூலம் நடமாடும் அங்கன்வாடி சேவைகளை சென்னை, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் முதல் கட்டமாக புலம்பெயர்ந்து வாழும் கூலித் தொழிலாளர்கள் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.40.85 லட்சம் செலவில் வழங்கப்படும்.

அரசு சேவை இல்லங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களின் மாணவிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் பயனாளிகள் மற்றும் திருநங்கை ஆகியோருக்கு ரூ.75 லட்சம் செலவில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் குழுமம் மூலம் முதல் கட்டமாக 300 பெண்களுக்கு நுகர்வோர் உபகரண பராமரிப்புத் தொழில்களில் பயிற்சி அளிக்கப்படும். மேலும் ரூ.25 ஆயிரம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் உதவி அளிக்கப்படும்.

குழந்தைத் திருமணத்தைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படும் வண்ணம் 3 குறும்படங்கள் எடுக்கப்பட்டு, தொலைக்காட்சிகளில் 60 முகூர்த்த நாள்களுக்கு முன்பு ஒளிபரப்பு செய்ததன் விளைவாக 2013-14-இல் 70 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு குழந்தை திருமணங்களில் இருந்து காப்பாற்றப்படும் பெண் குழந்தைகள் மறுவாழ்வு பெற வேண்டும் என்பதனை கருணையுடன் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, அந்தக் குழந்தைகளை அரசு சேவை இல்லங்கள் மற்றும் காப்பகங்களில் தங்க வைத்து, உயர்கல்வியைத் தொடரவும், தொழில் கல்வி பயிலவும் மாதம்தோறும் ரூ.1,000 வீதம் 18 வயது முடிவு வரை அவர்களுக்கு ரூ.54 லட்சம் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் குழுமம் மூலம் தொழிற்கல்வி பயில வழிவகை செய்யப்படும்.

பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்குவதற்கு ஏதுவாக திருப்பூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் புதிதாக துணி வெட்டும் மையங்கள் ரூ.14.5 லட்சம் செலவில் துவக்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான அறிவிப்பு: தஞ்சாவூரில் உள்ள அரசு பார்வையற்றோர் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படுகிறது. இதனால் அந்தப் பள்ளியில் உயர்கல்வி பயிலும் பார்வையற்ற மாணவர்கள் தங்களின் மேல்நிலை கல்வியை தஞ்சாவூர் பள்ளியிலேயே மேற்கொள்ள முடியும்.

இதன் மூலம் அரசுக்கு ரூ.80.71 லட்சம் செலவினம் ஏற்படும்.

32 மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகங்களின் உள் கட்டமைப்பு வசதிகள் ரூ.76.58 லட்சம் செலவினத்தில் மேம்படுத்தப்படும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement