Ad Code

Responsive Advertisement

பகுதிநேர ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி மறுப்பு: காற்றில் பறக்குது அரசாணை

தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் உள்ள பள்ளிகளை கூடுதலாக கண்காணிப்பதற்கு அரசாணை வெளியாகியும் கல்வித்துறை அதிகாரிகள் அனுமதிக்க மறுப்பதாக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.



தமிழகம் முழுவதும் 2012 மார்ச்சில் 16 ஆயிரத்து 549 பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இசை, ஓவியம், தையல், கம்ப்யூட்டர், உடற்கல்வி, தோட்டக்கலை ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாதம் 5,000 ரூபாய் சம்பளத்தில் பாடம் நடத்த அனுமதிக்கப்பட்டது.

ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் என வாரம் மூன்று நாட்கள் ஒன்பது மணி நேரம் மாதம் 32 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என பணி நியமனத்தில் தெரிவிக்கப்பட்டது. தவிர காலிப்பணியிடங்கள் இருக்கும் பட்சத்தில் மூன்று பள்ளிகள் வரை பாடம் நடத்த அனுமதி வழங்கவும் அரசாணை வெளியானது.

இதன் மூலம் சிறப்பாசிரியர்களின் மாதச்சம்பளம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. இதனால் தனியார் பள்ளிகளில் பணியாற்றிய பெரும்பாலானோர் பகுதிநேர சிறப்பாசிரியர் பணியில் சேர்ந்தனர்.

ஆனால் அறிவித்தபடி பெரும்பாலான மாவட்டங்களில் காலிப்பணியிடம் இருக்கும்பட்சத்திலும் கூடுதலாக பயிற்சி அளிக்க சிறப்பாசிரியர்களை அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் 540 சிறப்பாசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

இதில் ஓவியம், கம்ப்யூட்டர், இசை உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு அதிக பணியிடங்கள் காலியாக நிரப்பப்படாமல் உள்ளது. இப்பள்ளிகளில் சிறப்பாசிரியர்கள் கூடுதலாக பணியாற்ற அனுமதி வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் பலனில்லை என சிறப்பாசிரியர்கள் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இப்பணியிடங்களை நிரப்ப மாற்று ஏற்பாடு செய்யாவிடில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தனித்திறமைகள் முடங்க வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க செயலர் ராஜாதேவகாந்த் கூறுகையில், "பணி நியமனம் வழங்கிய போதே மூன்று பள்ளிகள் வரை பணியாற்ற அனுமதிப்பதாக தான் கூறப்பட்டது. இதுவரை ஒரு பள்ளியில் தான் பணியாற்றி வருகிறோம். தவிர சில பள்ளிகளில் மற்ற பாடங்களை கையாளுதல், அலுவலக பணி, தேர்வுக்கூட கண்காணிப்பு பணிகளிலும் கூடுதலாக பணிபுரிய கட்டாயப்படுத்துவது அதிகரித்துள்ளது. காலிப்பணியிடம் இருக்கும் பள்ளிகளில் சிறப்பாசிரியர்களை கூடுதலாக நியமிக்க உத்தரவிட வேண்டும்" என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement