Ad Code

Responsive Advertisement

கடலூர், திருவள்ளூரில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்காக தொழில்நுட்ப கல்லூரிகள்: ஜெயலலிதா அறிவிப்பு.!


சமூக ரீதியாக பின்தங்கியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி பெறும் வகையில் கடலூர், திருவள்ளூரில் ரூ.24 கோடி செலவில் தொழில்நுட்ப கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அவர் வாசித்த அறிக்கையில்:
"1) 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்கள் தொழில்நுட்பக் கல்வி பயில ஏதுவாக, கடலூர் மாவட்டம், நந்தனார் ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் இரு தொழில்நுட்பக் கல்லூரிகள் 24 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்படும்.
2) 10-ம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்கள் தொழிற் பயிற்சி பெற ஏதுவாக, திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு தொழிற் பயிற்சி நிலையம் 10 கோடி ரூபாய் செலவில் துவங்கப்படும்.
3) ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு, சரி விகித உணவுப் பட்டியலில் உள்ளபடி உணவு வழங்கப்பட்டு வருகிறது. விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் வகையிலும், ஒரே நேரத்தில் சூடான உணவு தயாரித்து பரிமாற வழிவகை செய்யும் வகையிலும், 150 மாணாக்கர்களுக்கு மேல் தங்கியுள்ள 200 விடுதிகளுக்கு 8 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவில் நீராவி கொதி கலன்கள் வாங்கி வழங்கப்படும்.
4) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில், தங்கி பயிலும் மாணாக்கர்களுக்கு சூடாகவும், சுவையாகவும் இட்லி தயாரித்து வழங்கும் வகையில், 1 கோடியே 26 லட்சம் ரூபாய் செலவில் 1,577 நீராவி இட்லி குக்கர்கள் வழங்கப்படும்.
5) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு பாய் மற்றும் போர்வை வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணாக்கர்களுக்கும் 4 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவில் உறையுடன் கூடிய தலையணை வழங்கப்படும்.
6) மலைப் பகுதிகளில் உள்ள பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் மழைக் காலங்களில் பள்ளிகளுக்கு நனையாமல் செல்ல ஏதுவாக அனைவருக்கும் 2 கோடி ரூபாய் செலவில் தலா ஒரு ரெயின் கோட்டும், குளிர் காலங்களில் மாணவ, மாணவியரின் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் 1 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவில் தலா ஒரு கம்பளிச் சட்டையும் வழங்கப்படும்.
7) தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளில் கல்வி பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால் 2014-2015 ஆம் கல்வி ஆண்டில், பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு விடுதிகள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, வேலூர், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய எட்டு மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 8 விடுதிகள் என மொத்தம் 10 கல்லூரி விடுதிகள் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் துவங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
8) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் அரசு பழங்குடியின உண்டி உறைவிடப் பள்ளிகளில், பயன்பாட்டில் உள்ள குழல் விளக்கு, மின் விசிறி மற்றும் தண்ணீர்க் குழாய் ஆகியவற்றினை பராமரிக்க ஒரு விடுதிக்கு ஆண்டொன்றுக்கு 15000/- ரூபாய் வீதம் 1647 விடுதிகளுக்கு 2 கோடியே 47 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
9) பி.எட்., படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 906 பழங்குடியினப் பட்டதாரிகளுக்கு, அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற ஏதுவாக, 66 லட்சம் ரூபாய் செலவில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வாயிலாகவும், ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற 500 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பி.எட். பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற 500 ஆதி திராவிடர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற வழிவகை செய்யும் வகையில்; 55 லட்சம் ரூபாய் செலவில் தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாகவும் பயிற்சி அளிக்கப்படும். அரசின் நடவடிக்கைகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர் கல்வியில் தேர்ச்சி பெற்று, அதன் மூலம் சமூக பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற வழி வகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்" இவ்வாறு முதல்வர் தெரிவித்தார். Keywords: தொழில்நுட்ப கல்லூரிகள், சட்டப்பேரவை, முதல்வர் ஜெயலலிதா, விதி 110, ஆதிதிராவிட மாணவர்கள் நலன்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement