Ad Code

Responsive Advertisement

இது மட்டும் போதுமா? : தள்ளாடும் தரம் உயர்த்தப்பட்ட அரசுப்பள்ளி : கட்டமைப்பை கண்டுகொள்ளுமா கல்வித்துறை?

அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்; கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


கல்வித்தரத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, பள்ளியின் அடிப்படை வசதிகளின் தரத்தையும் மேம்படுத்தினால் மட்டுமே, அரசுப்பள்ளிகளின் தரம் முழுமையாக உயரும். மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடத்தை மனதில் பதிய, அவர்களுக்கான சுற்றுச்சூழலும் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பள்ளிகளின் மோசமான கட்டமைப்புகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உடுமலை - திருமூர்த்திமலை ரோட்டில் அமைந்துள்ளது திருமூர்த்தி நகர். இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 127 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். திருமூர்த்திமலை சுற்றுப்பகுதியிலுள்ள கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக்கு ஆதாரமாக இப்பள்ளி திகழ்கிறது. 2011ம் ஆண்டு நடுநிலையிலிருந்து, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளி பெயரில் மட்டுமே தரம் உயர்ந்துள்ளது.
உயர்நிலைப்பள்ளிக்கு தேவையான அளவு வகுப்பறைகள் கட்டப்படவில்லை. பழைய வகுப்பறை கட்டடங்களையே பயன்படுத்தும் பரிதாப நிலையில் செயல்படுகிறது. இங்குள்ள வகுப்பறை கட்டடங்களில் பலத்த காற்றடித்தால், விழும் நிலையில் உள்ள மேற்கூரைகள், ஆசிரியர்களையும், மாணவர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.
இங்குள்ள வகுப்பறைகள் 2009-10 ம் ஆண்டில்தான் சீரமைக்கப்பட்டது. இருப்பினும், கடந்த ஓராண்டாக அடிக்கடி அவற்றின் மேற்கூரையிலுள்ள ஓடுகள் கீழே விழுவதால், மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது. ஆறு வகுப்பறைகளே உள்ளதால், பழுதடைந்த மேற்கூரை உள்ள வகுப்பறைகளிலும் மாணவர்களை அமர்த்தி பாடம் கற்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது; ஆசிரியர்கள் மனஉளைச்சலுக்குள்ளாகியுள்ளனர். மழைக்காலத்தில், பாடமும் நடத்த முடியாமல், மாணவர்கள் ஒதுங்கவும் வழியில்லாமல் தவிக்கும் அவலம் ஏற்படுகிறது.
பள்ளியின் சுற்றுச்சுவர், பள்ளியை சுற்றிலும் இல்லாமல், முன்பக்கம் மட்டுமே உள்ளது. முன்பக்கம் இருக்கும் சுவரிலுள்ள கற்களையும், இரவு நேரங்களில் அருகிலுள்ள விஷமிகள் சிலர் பெயர்த்து வைத்துள்ளனர்; இரவு நேரத்தில் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்து, சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதேநிலைதான் கிராப்புற அரசு பள்ளிகள் பலவற்றிலும் நிலவுகிறது.

மாணவர்கள் பாதுகாப்பு?
இப்பள்ளி வளாகத்தில் உள்ள திருமூர்த்திநகர் துவக்கப் பள்ளிக்குழந்தைகள், ஆசிரியர்களின் கண்காணிப்பு இல்லாத சமயங்களில், சிதிலமடைந்துள்ள சுற்றுச்சுவர் அருகே சென்று விளையாடுவதும், ரோட்டை கடந்து மறுபுறம் செல்வதுமாக உள்ளனர்.
பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில்,'சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பணி துவக்கப்பட்டு, நிதி பற்றாக்குறையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது; பணி விரைவில் தொடரும் என எதிர்பார்த்துள்ளோம்,' என்றனர்.


'வசதிகளை ஏற்படுத்த வேண்டும்'
உடுமலை பகுதி கல்வி ஆர்வலர்கள் கூறியதாவது:
மாணவர்களுக்கு முதலில் அரசு பள்ளிகளின் மீதான ஆர்வத்தை உருவாக்க வேண்டும். அதற்கு தேவையான அடிப்படை வசதி, பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பள்ளிக்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பள்ளி சார்பிலும், பள்ளி அமைந்துள்ள கிராம மக்கள், உள்ளாட்சி நிர்வாகிகள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் தங்களால் முடிந்த அளவுக்கு, பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement