Ad Code

Responsive Advertisement

90 சதவீத பள்ளிகளில் அன்னையர் குழு முடக்கம்; மாணவர்களின் பிரச்னைகளை மறைக்க திட்டம்? ஆய்வு பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தல்


பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட அன்னையர் குழு திட்டம், 90 சதவீத பள்ளிகளில் உருவாக்கப்படவில்லை. மீதியிருக்கும், 10 சதவீத பள்ளிகளிலும், பெயரளவில் மட்டுமே, குழுவின் செயல்பாடுகள் இருப்பதாக, புகார் எழுந்துள்ளது.

கோவை மாவட்டத்தில், 268 மெட்ரிக் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு மாணவர்களின் தாய்மார்களை ஒருங்கிணைத்து, அன்னையர் குழு உருவாக்க வேண்டுமென, கடந்தாண்டு பள்ளிக்கல்வித் துறை சார்பில், அரசாணை வெளியானது. இதன்படி, மாவட்டந்தோறும் உள்ள தனியார் பள்ளிகளில், அன்னையர் குழு உருவாக்க, முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக உத்தரவிடப்பட்டது. இந்த குழு, வாரத்திற்கு ஒருமுறை கூடுவதோடு, மாணவர்களது பிரச்னைகள், பள்ளிகளின் அடிப்படை வசதிகளில் குறைபாடு போன்றவற்றை நிர்வாகத்திடம் தெரியப்படுத்தி, அறிக்கை புத்தகத்தில் குறிப்பிட வேண்டும் என, குறிப்பிடப்பட்டது. இருப்பினும், கோவை மாவட்டத்தில், 90 சதவீத பள்ளிகளில், அன்னையர் குழு உருவாக்கப்படவில்லை என, பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர்.

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பெற்றோர் நலச்சங்க தலைவர் மணிமோகன் கூறுகையில், ''பெரும்பாலான பள்ளிகள், தேர்ச்சி விகிதத்தை மட்டுமே கருத்தில் கொள்வதால், மாணவர்களின் மற்ற தேவைகளை நிறைவேற்றி தருவதில், தவறிவிடுகின்றன. இதை பெற்றோர்கள் வாயிலாக அறிவுறுத்தவே, அன்னையர் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு, வாரந்தோறும் பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களின் பிரச்னைகளை எடுத்துரைத்து, அறிக்கை புத்தகத்தில் குறிப்பிட வேண்டும். இதனால், பெரும்பாலான பள்ளிகளில், அன்னையர் குழு உருவாக்கவில்லை. இதனால், மாணவர்களது பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்க வழியில்லை. எனவே, இதில் அதிகாரிகள் தலையிட்டு, ஆய்வு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்,'' என்றார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறுகையில், ''பள்ளிகளில் ஆய்வு செய்யும் போது, அன்னையர் குழு விபரங்களையும் பார்வையிட்டு வருகிறோம். ''குழு அமைக்கப்படாத பள்ளிகள் குறித்து, பெற்றோர்கள் புகார் தெரிவிக்கலாம். தவிர, தனியார் பள்ளி தலைமையாசிரியர்களை ஒருங்கிணைத்து விரைவில், அன்னையர் குழுவுக்கான செயல்பாடுகள் குறித்து, ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement