Ad Code

Responsive Advertisement

69 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து மனு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

தமிழ்நாட்டில் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு கல்வியில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிராக சில பொதுப் பிரிவு மாணவிகள் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு தமிழக அரசு வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதுதொடர்பாக பொதுப் பிரிவைச் சேர்ந்த அக்ஷயா, ஹரிணி, பொன்னாண்டாள், காருண்யா ஆகிய நான்கு மாணவிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கோபால் கௌடா அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.

அப்போது மாணவிகள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் விஜயன், "தமிழ்நாட்டில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியில் 69 சதவீத ஒதுக்கீடு அமலில் உள்ளது. இதனால், பொதுப் பிரிவு மாணவர்கள் 191 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்தும் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் தொழில் கல்வி பயில வாய்ப்புக் கிடைக்கவில்லை. மற்ற மாநிலங்களில் 50 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே அமலில் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் வேறு நடைமுறை இருப்பதால் தொழில்நுட்பக் கல்லூரிகளில் படிக்க முடியாத நிலை பொதுப் பிரிவு மாணவர்களுக்கு ஏற்படுகிறது.

எனவே, கடந்த ஆண்டுகளைப் போல பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் இடங்களை அதிகரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

அவரது கோரிக்கையைப் பதிவு செய்த நீதிபதிகள், "மாணவிகளின் மனு தொடர்பாக தமிழக அரசு ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

தமிழ்நாட்டில் தொழில் கல்வியில் குறிப்பாக மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களில் 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு தருவது மண்டல் கமிஷன் பரிந்துரைக்கு எதிரானது என்று கூறி சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் விஜயன் 1994-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் தொழில் கல்விகளான மருத்துவம்,பல் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் பொதுப் பிரிவு மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவர்.

அவர்களின் வழக்குகளை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம், "69 சதவீத இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் தொடரலாம் என்றும், அதே சமயம், பொதுப் பிரிவு மாணவர்களுக்கு சேர்க்கையில் வாய்ப்பளிக்க வேண்டும்' என்றும் தமிழக அரசுக்கு இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்கும்.

இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டிலும் சில மாணவிகள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement