Ad Code

Responsive Advertisement

நெல்லை, திருச்சி உட்பட 5 மாவட்டங்களில் புதிய ஐடிஐ : தமிழக முதல்வர் அறிவிப்பு

நெல்லை, திருச்சி உட்பட 5 மாவட்டங்களில் புதிய ஐடிஐகள் துவக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், தமிழக அரசால் வகுக்கப்பட்ட தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ல் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளை பூர்த்தி செய்ய தொழில் கல்வி படித்தவர்களும், தொழில் திறன் பெற்றவர்களும் தேவை. இதனைக் கருத்தில் கொண்டு, சென்ற ஆண்டு 10 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாகவும்; மாணாக்கர்களின் விருப்பத்தினை நிறைவு செய்யும் வகையிலும்; நடப்பாண்டில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணிகண்டம்; விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்ன சேலம்; திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர்; கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில்; மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை ஆகிய 5 இடங்களில் உள்ள இளைஞர்கள் தொழிற் கல்வி பயின்று வேலைவாய்ப்பு பெற்று பயனடையும் வகையில், 40 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் 5 புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் 15 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொடங்கியுள்ளது என்பதை இந்த மாமன்றத்திற்கு பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும், மகளிருக்கென, அம்பத்தூர், கிண்டி, புள்ளம்பாடி, கடலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல், நாமக்கல், நாகர்கோவில், ஆண்டிப்பட்டி மற்றும் கரூர் ஆகிய இடங்களில் 12 அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 3 ஆண்டுகளில் சொந்தக் கட்டடம் இல்லாத கடலூர் மற்றும் கரூர் மகளிர் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு சொந்தக் கட்டடம் கட்ட உத்தரவிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

2003-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நாமக்கல் மகளிர் அரசு தொழிற் பயிற்சி நிலையம் மட்டும் இன்று வரை வாடகைக் கட்டடத்தில் வசதி குறைவுடன் இயங்கி வருவதாகவும், இதன் காரணமாக மகளிர் பயிற்சி பெறுவதில் அதிக சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்பதும் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மகளிர் சிரமமின்றி தொழிற் பயிற்சி பெறும் வகையில், நாமக்கல் மகளிர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்திற்கு ஆய்வுக்கூடம், வகுப்பறை, அலுவலக அறை, நூலக அறை ஆகிய வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசின் இந்த நடவடிக்கைகள், வருங்காலத்தில் தொழிற் திறன் வாய்ந்த மனித வளம் அதிகரிக்க வழிவகை செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement