கும்பகோணம் பள்ளி தீ விபத்து ஏற்பட்டு இன்று 10ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.
கும்பகோணம் காசிராமன் தெருவில் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளியில் 2004–ம் ஆண்டு ஜூலை 16–ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பலியானார்கள். 18 குழந்தைகள் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் உலகையே உலுக்கியது. பள்ளி தீ விபத்து தொடர்பாக 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோர்கள் ஒவ்வொரு ஆண்டும் நினைவு தினத்தை கடைபிடித்து வருகின்றனர். இன்று 10–வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இன்று காலை குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் தங்கள் வீடுகளில் படையலிட்டு அஞ்சலி செலுத்தினார்கள். குழந்தைகள் புதைக்கப்பட்ட கல்லறை தோட்டத்துக்கு சென்று குழந்தைகளுக்கு பிடித்த திண்பண்டங்கள், விளையாட்டு பொருட்கள் வைத்து விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் சார்பில் கும்பகோணம் அமிர்தா நகரில் அமிர்தவிநாயகர் கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தீ விபத்து நடைபெற்ற ஸ்ரீகிருஷ்ணா பள்ளி முன்பு குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள், காயமடைந்த மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள், பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். அப்போது பெற்றோர்கள் கதறி அழுதனர். இதனை பார்த்த பொது மக்களும் கண்ணீர் விட்டனர்.
தமிழக அரசு சார்பில் கும்பகோணம் பாலக்கரையில் பள்ளி தீ விபத்தின் நினைவாக ரூ.66 லட்சத்தில் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதில் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
தொடர்ந்து தீ விபத்து நடந்த பள்ளி முன்பு குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் தொடர் அஞ்சலி நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
இன்று மாலை 5 மணிக்கு ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் இருந்து குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் சார்பில் 94 அகல் தீபங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கும்பகோணம் மகாமக குளத்தில் மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. இதில் பொதுமக்களும் பங்கேற்கிறார்கள்.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை