Ad Code

Responsive Advertisement

பொறியியல் தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆய்வு செய்ய உயர்நிலைக் குழு: அண்ணா பல்கலை. முடிவு

பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் வெகுவாகக் குறைந்தது தொடர்பாக ஆய்வு செய்ய உயர்நிலைக் குழு ஒன்றை அமைக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

இந்தக் குழு கல்லூரிகளின் கல்வித் தரம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், 506 இணைப்புக் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டது.

2012 நவம்பர்-டிசம்பர் மாத பல்கலைக்கழகத் தேர்வு, 2013 ஏப்ரல்-மே மற்றும் நவம்பர்-டிசம்பர் மாத பல்கலைக்கழகத் தேர்வுகளின் தேர்ச்சி விதிகம் இதில் இடம்பெற்றிருந்தது.

இதில் எந்தவொரு கல்லூரியும் 100 சதவீத தேர்ச்சி விகிதத்தைப் பெறவில்லை.

333 பொறியியல் கல்லூரிகள் 50 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தைப் பெற்றிருந்தன. 88 கல்லூரிகள் 60 சதவீதத்துக்கு குறைவாகவும், 50 பொறியியல் கல்லூரிகள் 70 சதவீதத்துக்கு குறைவாகவும், 25 கல்லூரிகள் 80 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தையும் பெற்றிருந்தன.

ஏற்கெனவே லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் வேலையின்றி இருக்கும் நிலையில், பொறியியல் மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் இப்போது வெகுவாக குறைந்தது கல்வியாளர்களிடையேயும், பெற்றோரிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து ஆராய்ந்து, அதை மேம்படுத்த உயர் நிலைக் குழு ஒன்றை அமைக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜாராம், "தினமணி'க்கு அளித்த பேட்டி:

தரமான பொறியியல் கல்வியை மாணவர்கள் பெறும் வகையில்தான் பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

ஆனால், மாணவர்களிடையே புரிந்துகொள்ளும் திறன் குறைந்து காணப்படுகிறது.

மேலும் வேலைவாய்ப்பைப் பெற பாட அறிவு மட்டும் போதாது, அதையும் தாண்டி பல்வேறு விஷயங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

இதுவரை வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளின்படி, பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்திருப்பது உண்மைதான். ஆனால், அண்மையில் நடந்து முடிந்துள்ள பல்கலைக்கழக பருவத் தேர்வுகளின் முடிவுகளையும் கணக்கில் கொள்ளும்போதுதான், கல்லூரிகளின் இறுதியான தேர்ச்சி விகிதம் தெரியவரும்.

எனவே, இந்தத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆராய்ந்து, அதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement