Ad Code

Responsive Advertisement

போரூர் கல்லூரி விடுதியில் ராக்கிங் கொடுமையால் மருத்துவ மாணவி தற்கொலை


ராக்கிங் கொடுமையால் மருத்துவக்கல்லூரி மாணவி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக சீனியர் மாணவியை போலீசார் கைது செய்தனர்.


மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை

காஞ்சீபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம், வண்ணீஸ்வரர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கோமளவள்ளி.

இவர்களது மகள் யோகலட்சுமி (19). போரூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் விடுதியில் தங்கி  பி.எஸ்.சி. அவசர சிகிச்சை பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.  நேற்று காலை வழக்கம் போல் வகுப்புக்கு சென்ற யோகலட்சுமி கல்லூரி முடிந்து விடுதிக்கு வந்தார். மற்ற மாணவிகள் வெளியே சென்றனர். அப்போது யோகலட்சுமி மட்டும் அறையிலேயே இருந்தார். பின்னர் வெளியே சென்ற மாணவிகள் விடுதிக்கு திரும்பி வந்தனர்.

அப்போது விடுதி அறையில் யோகலட்சுமி துப்பட்டாவால் தூக்குப் போட்டு இறந்தநிலையில் கிடந்தார். தகவல் அறிந்த போரூர் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராக்கிங் கொடுமையால் தற்கொலை

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் மாணவி யோகலட்சுமி சீனியர் மாணவி ஒருவரின் ராக்கிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.  

யோகலட்சுமியின் அறையில் இருந்த டைரி ஒன்றை  போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் மாணவி ஒருவரின் ராக்கிங் கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக யோகலட்சுமி எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

அதில், 'விடுதியில் எனது அறைக்கு எதிர் அறையில் தங்கி. நான் படிக்கும் பிரிவில் 3-ம் ஆண்டு படிக்கும் கோட்டீஸ்வரி(20) என்ற  மாணவி என்னை அதிக அளவில் ராக்கிங் செய்து வந்தார். எனக்கு உடம்பு சரியில்லாத நேரங்களில் கூட என்னை அவர் ராக்கிங் செய்து வந்தார். என்னால் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு ஆபாசமாக ராக்கிங் செய்தார். இதனை நான் யாரிடமும்  சொல்லாமல் எனது மனதுக்குள்ளேயே வைத்து வந்தேன். இதற்கு மேல் என்னால் தாங்க முடியவில்லை. எனவே, இந்த உலகை விட்டு போகிறேன். எனது தாய், தந்தை மற்றும் நண்பர்கள் என்னை மன்னிக்கவும். நான் ராக்கிங் கொடுமையால் தான்  இறக்கிறேன்' என்று பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

பெற்றோர் கண்ணீர் பேட்டி

இதுகுறித்து யோகலட்சுமியின் பெற்றோர் கண்ணீருடன் கூறியதாவது:-

எங்கள் மகளை மிகுந்த குடும்ப கஷ்டத்திற்கு இடையே படிக்க வைத்தோம். நேற்று கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து எனக்கு போன் வந்தது. அதில் முதலில் எனது மகள் தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தனர். அதன் பிறகு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்கள்.
கல்லூரி நிர்வாகமே  முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கொடுக்கின்றனர். யோகலட்சுமி கடந்த சில வாரங்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்தாள். அப்போது அப்பா என்னால் இந்த கல்லூரியில் படிக்க  முடியவில்லை. என்னை ராக்கிங் செய்கிறார்கள் என்று கூறினாள்.  அவளை சமாதானம் செய்து கல்லூரிக்கு அனுப்பி வைத்தோம். பின்னர் கல்லூரி நிர்வாகத்திடம் சென்று கூறினோம். கல்லூரி நிர்வாகம் அப்போது  நடவடிக்கை எடுத்திருந்தால் அவள் எங்களை விட்டு போய் இருக்க மாட்டாள். இவ்வாறு அவர்கள் அழுதபடி கூறினார்கள்.

சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்:-

காதல் தகராறு

கல்லூரியில் சக மாணவர் ஒருவரும், கோட்டீஸ்வரியும் காதலித்து வந்ததாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு  அந்த மாணவர் கோட்டீஸ்வரியை காதலிப்பதை தவிர்த்து விட்டு யோகலட்சுமியை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.  இதனை அறிந்த கோட்டீஸ்வரி காதலன் தன்னை விட்டுவிட்டு வேறு பெண்ணை காதலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் யோகலட்சுமியை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு ராக்கிங் செய்து  வந்துள்ளார். இதன் காரணமாகவே யோகலட்சுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

சீனியர் மாணவி கைது

ராக்கிங் கொடுமையால் மாணவி யோகலட்சுமி தற்கொலை செய்து கொண்டதையடுத்து சீனியர் மாணவி கோட்டீஸ்வரியை போலீசார் கைது செய்தனர். கோட்டீஸ்வரி திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். யோகலட்சுமியை தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement