Ad Code

Responsive Advertisement

எம்.எட். படிப்பில் பொது கவுன்சலிங் இந்த ஆண்டில் புதிய முறை அறிமுகம்: அரசு கல்லூரிகளுக்கு தனித்தனியே விண்ணப்பிக்க தேவையில்லை

பி.எட். படிப்பை போல எம்.எட். படிப்பிலும் பொது கவுன்சலிங் முறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம்,
மாணவர்கள் ஒவ்வொரு அரசு மற்றும் உதவி பெறும் கல்வியியல் கல்லூரிக்கும் எம்எட் படிப்புக்கு தனித்தனியே விண்ணப்பிக்க தேவையில்லை.


பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவர்கள் ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியே விண்ணப்பிப்பது இல்லை.அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஒரு விண்ணப்பம் போட்டால் போதும். ஒற்றைச்சாளர முறையில் (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) பொது கவுன்சலிங் மூலம் அவர்கள் தங்களுக்குப் பிடித்தமான கல்லூரியை தேர்வுசெய்து கொள்ளலாம்.இதே நடைமுறைதான் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பிஎட் படிப்புக்கும் பின்பற்றப்படுகிறது. பிஎட். படிப்பில் சேருவதற்காக ஒவ்வொரு கல்லூரிக்கும் அவர்கள் தனித்தனியே விண்ணப்பம் அனுப்புவது கிடையாது. ஆனால், எம்எட் படிப்புக்கு மட்டும் சேர விரும்பும் ஒவ்வொரு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும் தனித்தனியே விண்ணப்பித்து வந்தனர்.

எம்எட் படிப்பிலும் அறிமுகம்

இந்த நிலையில், பிஎட் படிப்பைப் போன்று எம்எட் படிப்பிலும் (அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியல் கல்லூரிகள்) பொது கவுன்சலிங் முறையை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியல் கல்லூரிகளில் ஏறத்தாழ 455 எம்எட் இடங்கள் உள்ளன.தனியார் கல்வியியல் கல்லூரிகள் பிஎட் படிப்பிலும் சரி, எம்எட் படிப்பிலும் சரி அரசு ஒதுக்கீட்டுக்கு எந்த இடமும் வழங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எம்எட் படிப்புக்கு ஒவ்வொரு கல்லூரிக்கும் அதிகபட்சம் 35 இடங்களுக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்(என்சிடிஇ) அனுமதி அளிக்கிறது.

துணைவேந்தர் தலைமையில் ஆய்வு

இந்த ஆண்டு எம்.எட். படிப்புடன் பிஎட் படிப்புக்கான பொது கவுன்சலிங் நடத்தும் பொறுப்பு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அட்மிஷன் தொடர்பாக அனைத்து கல்வியியல் கல்லூரி முதல்வர்களுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே நடத்தி முடிக்கும் வகையில் பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவை ஜூலை 10-ம் தேதிக்குள் வெளியிட அனைத்து பல்கலைக்கழகத் துணை வேந்தர்களும் உறுதி அளித்திருப்பதாகவும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன், பதிவாளர் எஸ்.கலைச்செல்வன் ஆகியோர் ‘தி இந்து’ நிருபரிடம் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement