Ad Code

Responsive Advertisement

பட்டப் படிப்புகளை அங்கீகரிக்கும் அரசின் குழு மாற்றியமைப்பு

நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்டப் படிப்புகளை அங்கீகரிக்கும் தமிழக அரசின் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கோரிக்கையை ஏற்று இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் தெரிவித்துள்ளார்.


தமிழகத்திலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் சில குறிப்பிட்ட தனித்துவமான பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. உதாரணத்துக்கு, இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் என்ற பட்டப் படிப்பானது, மெக்கானிக்கல் இன்ஜினியரிங்குக்கு இணையானது என்று தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு ஒரு தனித்துவத்துமான பட்டப் படிப்பை, மற்ற பொதுவான பட்டப் படிப்புகளுக்கு இணையாக்குவதன் மூலமாகத்தான் சம்பந்தப்பட்ட தனித்துவமான பட்டப் படிப்பை படித்த மாணவர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் உள்பட பல்வேறு வேலைவாய்ப்புக்கான தேர்வுகளை எழுத முடியும்.

இவ்வாறு பட்டப் படிப்புகளை இணைப்படுத்தும் பணியை, தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழு மேற்கொண்டு வருகிறது. இந்தக் குழுவில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர், உயர் கல்வித் துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்குநர், தொழில்நுட்ப கல்வி இயக்குநர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

குழு மாற்றியமைப்பு: இந்த நிலையில், பட்டப் படிப்புகளை இணைப்படுத்துவதற்கான குழுக்களை மாற்றியமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது. அதன்படி, இந்தக் குழுவில் புதிதாக மூன்று பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதன் மூலம், குழுவில் இருந்து அது நீக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட குழுவில் பள்ளிக் கல்வித் துறை செயலாளர், தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சிலின் துணைத் தலைவர், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மாற்றியமைக்கப்பட்ட குழுவின் விவரம்:

பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர், பள்ளிக் கல்வித் துறை செயலாளர், உயர்கல்வித் துறை செயலாளர், தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், கல்லூரி கல்வி இயக்குநர், தொழில்நுட்ப கல்வி இயக்குநர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் குழுவின் உறுப்பினர் செயலாளராக இருப்பார் என்று டேவிதார் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.

வி.ஏ.ஓ., உள்ளிட்ட பணியிடங்கள்: கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) போன்ற பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியே போதுமானது. இந்த நிலையில், பள்ளிப் படிப்பை முடித்தவர்கள்கூட, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வினை எழுதி அரசுப் பணிகளில் சேரும் நிலை உள்ளது. எனவே, அவர்களின் சான்றிதழ்கள் மற்றும் படிப்புகளை உறுதி செய்திடும் வகையில், பட்டப் படிப்புகளை அங்கீகரிக்கும் குழுவில் பள்ளிக் கல்வித் துறையும் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement