Ad Code

Responsive Advertisement

எங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு சமைக்கத் தெரியும்: 'அம்மா பள்ளி'யின் அடையாளமாகத் திகழும் 'சம்பக் பள்ளி'


குழந்தைகளுக்கு செயல் விளக்கம் அளிக்கும் ஆசிரியர் பாண்டியராஜன்
அம்மா உணவகம்.. அம்மா மருந்தகம் போல் ‘அம்மா பள்ளி’களும் திறக்கப்படுமா என்று விவாதங்கள் புறப்பட்டிருக்கும் நிலையில், மதுரைக்கு அருகிலுள்ள முத்துப்பட்டியில் ‘அம்மா பள்ளி’யின் அடையாளத்துடன் அழகுற செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ‘சம்பக்’ பள்ளி ‘சம்பக் என்பது ஒரு வகை பூ.


குழந்தைகளும் பூ போன்றவர்கள் என்பதால் மலரின் பெயரில் ஆரம்பப் பள்ளியை நடத்துகிறார் ஆசிரியர் பாண்டியராஜன். இவரது பள்ளியில் 122 குழந்தைகள் படிக்கிறார்கள். அத்தனை பேருமே கட்டிடத் தொழிலாளிகளின் குழந்தைகள். படிப்பின் அருமை தெரியாத பெற்றோரிடம் பேசிப் பேசி இத்தனை குழந்தைகளை இங்கே வரவைத்திருக்கிறார் பாண்டியராஜன்.

அரசு புதிய பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக அதை சோதனை அடிப்படையில் சில பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும். அப்படியான சோதனைப் பள்ளிகளில் சம்பக் பள்ளியும் ஒன்று. செயல்வழிக் கற்றல், சமச்சீர் கல்வி இவைகள் சம்பக் பள்ளியில்தான் முதலில் அறிமுகப்படுத்திப் பார்க்கப்பட்டது. மற்ற பள்ளிகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது இந்தப் பள்ளி. அது எப்படி? விளக்குகிறார் பாண்டியராஜன்.

“பாடத் திட்டம் சார்ந்து இல்லாமல் இயற்கையான ஆய்வுகளை செய்தல், சமுதாயம் சார்ந்த கல்வியைக் கற்றுத் தருதல் இதுதான் எங்கள் சம்பக் பள்ளியின் சிறப்பு. எங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு அற்புதமாய் சமைக்கவும் தெரியும். அந்த அளவுக்கு அவர்களுக்கு வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக் கொடுத்திருக்கிறோம்.

இங்கே தேர்வுகள் உண்டு; ஆனால், கேள்விகள் இல்லை. கற்றதில் அவர்களுக்கு எதுவெல்லாம் தெரியுமோ அதை எல்லாம் எழுதலாம். எதையெல்லாம் எழுதாமல் விட்டிருக்கிறார்களோ அந்தப் பகுதிகள் அவர்களுக்கு புரியவில்லை என்று அர்த்தம். அதைத் தெரிந்துகொண்டு அந்தப் பகுதிகளில் மீண்டும் சிறப்புக் கவனம் எடுத்து அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்போம்.

இந்த சிஸ்டத்தை அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தினால் நம்முடைய பிள்ளைகள் அறிவுப் பொக்கிஷங்களாகி விடுவார்கள். ஆனால், இப்போது அரசுப் பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்களில் பெரும் பகுதியினர் தலைமுறை கடந்தவர்களாக இருப்பதால் இந்த கல்வி முறையை அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. இதனால் அவர்கள் இதையெல்லாம் செயல்படுத்தவும் விரும்புவதில்லை. இளம் ஆசிரியர்கள் எடுத்துச் சொன்னாலும், ‘புது விளக்குமாறு அப்படித்தான் இருக்கும்’ என்று கேலி பேசுகிறார்கள்.

கரும்பலகையில் எழுதிப் போட்டு இதையெல்லாம் புரியவைக்க முடியாது. குழந்தைகளோடு ஆசிரியர்களும் தரையில் அமர்ந்து பேசினால்தான் புரிய வைக்க முடியும். எங்கள் பள்ளிப் பிள்ளைகளுக்கு புரிதல் அதிகம் இருக்கும். அவர்கள் தங்கள் பெற்றோருக்கே வழிகாட்டுவார்கள். எதையும் ஆழமாக அறிய வேண்டும் என்பதால் கேள்விகள் அதிகம் கேட்பார்கள். அதனாலேயே எங்கள் பிள்ளைகள் மற்ற உயர் பள்ளிகளில் துரத்தப்பட்ட சம்பவங்களும் உண்டு. இவர்களின் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாத ஆசிரியர்கள், ‘அதிக பிரசங்கி’ என்ற பட்டத்தை கட்டிவிடுகிறார்கள்.

மற்ற பள்ளிகளின் பிள்ளைகளுக்கும் வாசிப்புத் திறனை அதிகப்படுத்துவதற்காக எங்கள் பள்ளியில் பயிற்சி மையம் இருக்கிறது. இங்குள்ள நூலகத்தில் 4000 புத்தகங்களை வைத்திருக்கிறோம். பள்ளிக் குழந்தைகள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இங்கு வந்து புத்தகங்களை படிக்கலாம். சம்பக் குழந்தைகள் எவருடைய தயவும் இல்லாமல் சாதிச் சான்றிதழ் வாங்கி வந்துவிடுவார்கள். தனி ஆளாய் போய் வங்கிக் கணக்கு தொடங்கிவிடும் தைரியம் இவர்களுக்கு இருக்கிறது. இதுதானே வாழ்க்கைக் கல்வி. ஆனால், இன்றைக்கு மெட்ரிக் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கே இதுபோன்ற தன்னம்பிக்கை இல்லையே.

எல்லாமே மதிப்பெண்மயமாகிவிட்ட இந்தக் கல்வி யுகத்தில் பள்ளிக் குழந்தைகள் சிரித்துப் பேசக்கூட நேரம் இல்லை. வீடு, பள்ளி, பள்ளி வேன் இதற்குள்ளேயே அவர்களின் உலகம் சுருங்கிவிடுகிறது.

வகுப்பறைகளில் சிரிக்கக் கூட அவர்களுக்கு சுதந்திரம் இல்லை. இப்படி அழுந்தப்பட்டுக் கிடப்பதால்தான் பெண் பிள்ளைகள் யாரோ ஒருவன் தன்னிடம் அன்பாகப் பேசும்போது தடம் மாறிவிடுகிறார்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை முதலில் நம்ப வேண்டும்.

அந்த நம்பிக்கையை வரவைப்பதற்கு குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேச வேண்டும். அப்போதுதான் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அதை விட்டுவிட்டு, குழந்தைகளை மட்டுமே குறை சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை’’ அழகாய் சொன்னார் பாண்டியராஜன்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement