Ad Code

Responsive Advertisement

நான்காண்டு பட்டப் படிப்புத் திட்டம் வாபஸ்: யுஜிசி உத்தரவுக்கு பணிந்தது தில்லி பல்கலைக்கழகம்

 தில்லி பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நான்காண்டு இளங்கலை பட்டப் படிப்புத் திட்டம் திரும்பப் பெறப்படுகிறது என்று அப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தினேஷ் சிங் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.


இது தொடர்பாக அவர் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "யுஜிசி பிறப்பித்துள்ள உத்தரவை ஏற்று 2013-14 கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நான்காண்டு இளங்கலை பட்டப் படிப்புத் திட்டத்தை தில்லி பல்கலைக்கழகம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது. கடந்த கல்வியாண்டில் நான்காண்டு பட்டப்படிப்பில் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் 2012-13 கல்வியாண்டில் அமலில் இருந்த மூன்றாண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களாகக் கருதப்படுவர். நிகழ் கல்வியாண்டில் பழைய முறைப்படியே மூன்றாண்டு இளங்கலை பட்டப் படிப்புத் திட்டத்தின்படி மாணவர் சேர்க்கை நடைபெறும்' என்று கூறியுள்ளார்.


மேற்கண்ட அறிவிப்பை உறுதிப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ள தினேஷ் சிங் "மாணவர்களின் நலனும், மாணவர் சேர்க்கையும் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டியதுதான் தற்போதைய நிலையில், மிகவும் முக்கியமான நடவடிக்கையாகும். எனவே, யுஜிசி பிறப்பித்த உத்தரவை மதித்து நான்காண்டு பாடத் திட்டம் திரும்பப் பெறப்படுகிறது. இதற்கு தகுந்தாற்போல, மாணவர் சேர்க்கையை பழைய மூன்றாண்டு பட்டப்படிப்புத் திட்டத்தின்படி துரிதமாக மேற்கொள்ள வேண்டும் எனக் கல்லூரி முதல்வர்களை தில்லி பல்கலைக்கழகம் கேட்டுக் கொள்கிறது' என்று கூறியுள்ளார்.


அவரது அறிவிப்பையடுத்து, கடந்த 12 நாள்களாக நான்காண்டு இளங்கலை பட்டப் படிப்புத் திட்டம் தொடர்பாக நீடித்து வந்த சர்ச்சைக்கும், மாணவர்களிடையே நிலவிய குழப்பத்துக்கும் முடிவு ஏற்பட்டுள்ளது.


மாணவர்கள் மகிழ்ச்சி
நான்காண்டு பட்டப் படிப்புத் திட்டம் திரும்பப் பெறப்படும் என்ற தில்லி பல்கலைக்கழக துணைவேந்தரின் அறிவிப்பு வெள்ளிக்கிழமை பிற்பகலில் வெளியானது.


இந் நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் தினேஷ் சிங்குக்கு எதிராகவும், நான்காண்டு பட்டப் படிப்பு திட்டத்துக்கு எதிராகவும் தில்லி ஜந்தர் மந்தர், பல்கலைக்கழக வளாகம், தினேஷ் சிங் இல்லம் ஆகிய பகுதிகளில் மாணவர்கள் நூற்றுக்கணக்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிற்பகலில் நான்காண்டு பட்டப் படிப்புத் திட்டம் திரும்பப் பெறப்பட்ட தகவல் கிடைத்ததும் மாணவர்கள் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை சக மாணவர்களிடையே விநியோகித்தும் அவர்கள் போராட்டம் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement