Ad Code

Responsive Advertisement

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காத 77 தலைமை ஆசிரியர்கள் மீது விசாரணை நடத்தக்கோரி வழக்கு பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காத, 77 தலைமை ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தக்கோரிய வழக்கில் பள்ளிக்கல்வித்துறைக்கு நோட்டீசு அனுப்ப சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், காஞ்சீபுரம் மாவட்டம், கீழ்மருவத்தூரை சேர்ந்த கண்ணன் கோவிந்தராஜூ தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
கல்வி உதவித்தொகை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பணியாற்றும் 77 தலைமை ஆசிரியர்கள், 2011-12 கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கவேண்டிய ரூ.81 லட்சம் கல்வி உதவி தொகையை வழங்கவில்லை என்று அவர்களை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு 1-ந் தேதி உத்தரவிட்டது.
இதன்பின்னர், அந்த தலைமை ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடந்தது. இதற்கிடையில், 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 77 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. இந்த தலைமை ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விசாரிக்க வேண்டும்

இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிக்கல்வி துறையிடம் விளக்கம் கேட்டேன். அதற்கு பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை 77 தலைமை ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறியது. ஆனால், தலைமை ஆசிரியர்களுக்கு எப்படி மீண்டும் பணி வழங்கப்பட்டது என்ற கேள்விக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே மாணவர்கள் உதவி தொகையை கையாடல் செய்த 77 தலைமை ஆசிரியர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை உடனடியாக விசாரிக்கும்படி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

நோட்டீசு

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் மனுவுக்கு வருகிற ஜூலை 9-ந் தேதிக்குள் பதில் அளிக்கும்படி பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement