Ad Code

Responsive Advertisement

TNTET: சான்றிதழ் சரிபார்ப்பு பணி நிறவடைந்ததும், ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் -Jaya News

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்த 5 சதவீத மதிப்பெண் சலுகை அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 25 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி, மாநிலம் முழுவதும் 29 மையங்களில் இன்று தொடங்கியுள்ளது.



தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினர் அனைவருக்கும் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, இடஒதுக்கீடு பிரிவினர், 150 மதிப்பெண்ணுக்கு 82 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சியடைந்தவர்களாவர்.

இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீதமதிப்பெண் சலுகைபடி தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில், 5 சதவீத மதிப்பெண் சலுகையின்படி தேர்ச்சி பெற்ற சுமார் 25 ஆயிரம்பேருக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி இன்று தொடங்கி, வரும் 12-ம் தேதிவரை நடைபெறுகிறது. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், தஞ்சை உள்ளிட்ட 29 மையங்களில் நடைபெற்று வரும் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில், அந்தந்த மாவட்டத்திற்குரிய தேர்வாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.

சலுகை மதிப்பெண் வழங்கி, தங்களுக்கு ஆசிரியர் பணி கிடைக்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, தேர்வர்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, ஏற்கனவே நடைபெற்ற சான்றிதழ்சரிபார்ப்பின் போது பங்கேற்க முடியாதவர்களும், சான்றிதழை உரிய நேரத்தில் சமர்ப்பிக்க இயலாமல் போனவர்களுக்கும், வரும் 12-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்புப் பணியில் பங்கேற்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி நிறவடைந்ததும், ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ad Code

Responsive Advertisement