Ad Code

Responsive Advertisement

மருத்துவம், பொறியியல் அட்மிஷன் கட்ஆப் மதிப்பெண் உயர்கிறது...

சென்னை: பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் மற்றும் சென்டம் எண்ணிக்கை அதிகரிப்பால், பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பில் சேர கட்ஆப் மதிப்பெண் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பிளஸ்2 தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி முடிவுற்றது. இதில், 8 லட்சத்து 21 ஆயிரத்து 671 மாணவ, மாணவிகள் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதினர். இதில், 7 லட்சத்து 44 ஆயிரத்து 698 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள 554 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 70 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதில் 1 லட்சத்து 60 ஆயிரம் இடங்கள் கவுன்சலிங் மூலம் நிரப்பப்படும். மே 3ம் தேதி தொடங்கி, மே 20ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. இதற்காக சென்னையில் 4 மையங்கள் உள்பட தமிழகத்தில் 60 மையங்கள் இயங்கி வருகின்றன.

மேலும், தமிழகத்தில் 18 அரசு மருத்துவ கல்லூரிகளில் மத்திய அரசுக்கு ஒதுக்கீடு போக 1,823 இடங்கள் உள்ளன. ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரியில் மத்திய அரசு ஒதுக்கீடு போக 85 இடங்கள் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் உள்ள 11 சுயநிதி கல்லூரிகளில் 839 இடங்கள் அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 17 சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் 878 இடங்கள் அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான கவுன்சிலிங் விண்ணப்பம் வரும் 14ம் தேதி முதல் விநியோகிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் பிஇ படிப்புக்கு உரிய கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண்ணை 300க்கும் குறைவான மாணவர்களும், எம்பிபிஎஸ் படிப்புக்கு உரிய உயிரியல், வேதியியல், இயற்பியல்  பாடங்களில் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண்ணை 100க்கும் குறைவான மாணவர்களும் எடுத்திருந்தனர்.

அதேநேரம், இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில், பிஇ படிப்புக்கு உரிய கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண்ணை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும், எம்பிபிஎஸ் படிப்புக்கு உரிய உயிரியல், வேதியியல், இயற்பியல்  பாடங்களில் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண்ணை 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களும் எடுத்துள்ளனர்.

இதன்படி பார்த்தால், பிளஸ் 2 பொது தேர்வில் சென்ற ஆண்டைவிட, இந்த ஆண்டு மாணவர்களின் மதிப்பெண் அதிகரித்துள்ளது. அனைத்து பாடங்களிலும் சென்டம் எடுத்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்கு 1 மதிப்பெண்ணும், மருத்துவத்திற்கு 0.5 மதிப்பெண்ணும் கட்ஆப் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ad Code

Responsive Advertisement