Ad Code

Responsive Advertisement

அரசு மாற்றுத்திறனாளி பள்ளிகளில் ஆய்வுக்கு அதிகாரிகள் நியமிக்கணும் சங்க மாநில செயலாளர் கோரிக்கை...


"தமிழகத்திலுள்ள 23 அரசு மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட அளவில் உயரதிகாரிகளை நியமித்து, கண்காணிக்க வேண்டும். குறைபாடுகளை முழுமையாக களைய வேண்டும்,'' என, தஞ்சையில், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில செயலாளர் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில செயலாளர் நம்புராஜன் தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது

தமிழகத்தில், 23 அரசு மாற்றுத்திறனாளிகள் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்தின் கீழ் இயக்கப்படுகிறது. இப்பள்ளிகளிலுள்ள குறைபாடுகளை கண்காணித்து, நிவர்த்தி செய்ய மாவட்ட அளவில் உரிய உயரதிகாரிகள் இல்லாத நிலையே நிலவுகிறது.

எனவே, இப்பள்ளிகளை முறையாக ஆய்வு செய்ய மாவட்ட அளவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மேலும், பள்ளிகளில் நடந்து வரும் குறைபாடுகளை விசாரிக்க உயர்மட்ட குழுவை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தஞ்சை காதுகேளாதோர் அரசு மேல்நிலைப் பள்ளியில், ப்ளஸ் 2 தேர்வு எழுதிய 21 மாணவர்களும் தேரச்சி பெறவில்லை. இதேபோல, தர்மபுரி பள்ளியில் தேர்வு எழுதிய 24 பேரில் 8 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கு, தகுதியற்ற தலைமை ஆசிரியர்கள் உள்ளதும், பாடப்பிரிவுக்கு ஏற்றவாறு, ஆசிரியர்கள் நியமிக்கப்படாததும் தான் காரணம் ஆகும். தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியரை மீண்டும் அதே பள்ளியில் சேர்த்து, தேர்ச்சி பெறும் வரை பயிற்சி பாடங்களை நடத்த வேண்டும். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் இப்பள்ளிகளை மாநில பள்ளி கல்வித்துறையின்கீழ் கொண்டு வர வேண்டும் என, வலியுறுத்தி, வரும் 26ம் தேதி தஞ்சை, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன், கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement