Ad Code

Responsive Advertisement

நான்கில் ஒரு மாணவருக்கு ஒரு வரிகூட படிக்கத் தெரியவில்லை!’ சிறந்த ஆசிரியர்களுக்கு நல்ல ஊதியம் அளித்து பணியில் அமர்த்திக் கொள்வதும், அவர்களை தக்க வைத்துக்கொள்வதுமே இதற்கான முக்கியத் தீர்வாகும்.

‘நான்கில் ஒரு மாணவருக்கு ஒரு வரிகூட படிக்கத் தெரியவில்லை!’ நான்கு மாணவர்களில்
ஒரு மாணவருக்கு ஒரு வரிகூட படிக்கத் தெரியவில்லை என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது யுனெஸ்கோ. அனைவருக்கும் கல்வி குறித்த ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பின் (யுனெஸ்கோ) மதிப்பீட்டு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் கல்வித் தரம் மிகவும் மோசமாக இருப்பதையும், சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களின் கல்வி, மந்த நிலையில் இருப்பதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய முக்கியப் பிரச்சினை இது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் கல்வித் தரம் எந்த அளவுக்கு மோசமாக உள்ளது தெரியுமா? நான்கு மாணவர்களில் ஒருவர், ஒரு வரியைக்கூட படிக்க முடியாதவராக இருக்கிறார். அத்துடன் சர்வதேச கற்றல் மந்தநிலையால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.129 பில்லியன் டாலர் செலவாகிறது. 37 நாடுகளில் ஏழைக் குழந்தைகளின் தொடக்கக் கல்விக்காக அரசு செலவிடும் தொகையில், பாதி அளவு வீணடிக்கப்படுகிறது. இதற்குக் காரணம், குழந்தைகள் எதையும் தொடர்ச்சியாகக் கற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதே. 20 ஆண்டுகள் கல்வி கற்ற பிறகும், தற்போதைய மாணவர்கள் தாங்களாகவே வேலை தேடிக் கொள்ளும் அளவுக்கு தன்னம்பிக்கை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். கல்வித் துறைக்காக அதிக அளவு முதலீடு செய்தால் மட்டுமே, நம் நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேற முடியும்" என்கிறார் தில்லி அரசின் கல்வித் துறை அமைச்சர் மனிஷ் சிசோடியா. ஜி.எம்.ஆர். அறிக்கைப்படி, வளர்ந்து வரும் நாடுகளில் ஏழ்மையான நிலையில் இருக்கும் இளம் பெண்களுக்கு எழுத்தறிவு என்பது 2072-ஆம் ஆண்டு வாக்கிலேயே முழுமையடையும். இந்தியாவிலுள்ள பணக்கார இளம் பெண்கள், எழுத்தறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஏழைப் பெண்கள் இந்த நிலையை 2080-ஆம் ஆண்டு வாக்கிலேயே எட்ட முடியும். உரிய நடவடிக்கையின் மூலம் விரைவான உறுதியான முன்னேற்றம் சாத்தியமாகும் என்கிறது ஜி.எம்.ஆர். அறிக்கை. உதாரணமாக, நேபாளத்தில் ஏழை இளம் பெண்களின் எழுத்தறிவு விகிதம் 2001-இல் 18 சதவீதமாக இருந்தது. 2011-இல் இது 54 சதவீதமாக, மும்மடங்கு அதிகரித்துள்ளது. இந்தப் பிரச்சினை களுக்கெல்லாம் முக்கியத் தீர்வு ஒன்றையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. சிறந்த ஆசிரியர்களுக்கு நல்ல ஊதியம் அளித்து பணியில் அமர்த்திக் கொள்வதும், அவர்களை தக்க வைத்துக்கொள்வதுமே இதற்கான முக்கியத் தீர்வாகும். அனைத்துத் தரப்பினருக்கும் தரமான கல்வி கிடைப்பதில் முக்கியத் தடையாக இருப்பது, பள்ளிகளில் இருக்கும் பாலின வன்முறையே. அது களையப்பட வேண்டும். அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க, சர்வதேச மதிப்பீட்டு அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகள்: * கல்வி சார்ந்த குறிக்கோள்கள் சம நோக்குடையதாக, இரு பாலருக்கும் ஏற்றதாக இருக்கவேண்டும். அப்படியிருந்தால்தான் ஒவ்வொரு குழந்தையும் தங்களுக்குரிய சமமான கல்வி வாய்ப்பைப் பெற முடியும். * வசதி வாய்ப்பற்ற சமூகத்திலிருந்து வரும் குழந்தைகளின் கல்வித் தரம் உயரும் வகையில், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட ஒவ்வொரு ஆசிரியருக்கும் போதிய பயிற்சி அளிக்க வேண்டும். * வளர்ச்சியற்ற கிராமப் பகுதிகளில் பணிபுரியும் மிகச் சிறந்த ஆசிரியர்களுக்கு அரசு சிறந்த ஊதியம் வழங்க வேண்டும். ஜி.எம்.ஆர். அறிக்கை பற்றி மண்ணிவாக்கம் ஸ்ரீ நடேசன் வித்யாசாலா மெட்ரிக் பள்ளி நிறுவனர் என்.ராமசுப்ரமணியன் கூறுகையில், பள்ளிக் குழந்தைகளின் கல்வி நிலை பற்றி ஆண்டுதோறும் வெளியிடப்படும் அசர் அறிக்கையிலேயே பல விஷயங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அசர் அறிக்கையின் மறு பதிப்பாகத்தான் இந்த அறிக்கை உள்ளது" என்கிறார். இந்திய அளவில் 28.07 கோடிப் பேர் படிப்பறிவற்றவர்களாக உள்ளனர். 40 சதவீதம் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைப்பதில்லை. சரியான சத்துணவு இல்லாத காரணத்தால் குழந்தைகளின் கற்கும் திறன் பாதிப்புக்குள்ளாகிறது. அதேபோல தமிழகத்தில் 16 லட்சம் ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். பகுதி நேர ஆசிரியர்களாக 7 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். பணிக்கு வரும் ஆசிரியர்களும் அடிக்கடி விடுப்பில் செல்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில் தடையேற்படுகிறது. 40 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்பதுதான் பரிந்துரைக்கப்பட்ட அளவு. ஆனால் அது இந்தியாவில் இன்னமும் எட்டப்படவில்லை. மலைப்பகுதிகள் போன்ற நீண்ட தூரப் பகுதிகளுக்குச் சென்று பணிபுரிய ஆசிரியர்கள் விரும்புவதில்லை. தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு போதுமான ஊதியமளித்து அவர்களை தக்கவைத்துக் கொள்ள அரசு முன் வரவேண்டும். கிராமப்பகுதிகளில் 5-ஆம் வகுப்புக்கு மேல் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இடைநிற்றல் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். பெரும்பாலான மாநிலங்களில் பெண் குழந்தைகள் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிடுகிறார்கள். பாலின வேறுபாடில்லாமல் அனைவருக்கும் தரமான கல்வியை அளிக்க அரசு முன்வேண்டும். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும். வெறும் பேச்சுடன் நின்றுவிடாமல் உறுதியான சில நடவடிக்கைகள் எடுத்து கல்வித் தரத்தை உயர்த்த முன்வந்தால் மட்டுமே, ஆண்டுதோறும் வரும் இதுபோன்ற அறிக்கைகளுக்கு வாய்ப்பில்லாமல் போகும்" என்கிறார் ராமசுப்ரமணியன்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement