Ad Code

Responsive Advertisement

அனுமதி ! : ஆங்கில வழிக்கல்வித் திட்டத்திற்கு...: அரசு பள்ளிகளில் துவங்க ஏற்பாடு...

 அரசு பள்ளிகளில் இரண்டாம் ஆண்டாக ஆங்கில வழிக்கல்வியை துவக்க பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.
ஆங்கில வழிக்கல்வி மீதான மோகத்தால் நகர பகுதி மக்கள் மட்டுமின்றி கிராமப் பகுதி மக்களும் தங்கள் குழந்தைகளை மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை நாளுக்கு நாள் குறைந்தது. தனியார் பள்ளிகளோடு போட்டி போட முடியாததால் அரசு பள்ளிகளுக்கு பூட்டு போடும் சூழல் ஏற்பட்டது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசு 1,450 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை துவக்குவது என, முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக, ஒன்றாம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளில் மட்டும் இக்கல்வித் திட்டத்தை துவக்க கடந்தாண்டு பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்தது. அதன்படி மாவட்டத்தில் 164 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டது. அதில், 3,506 மாணவ, மாணவிகளும், 65 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் துவங்கப்பட்ட ஆங்கில வழிக் கல்வியில் 1,500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து இந்தாண்டு மேலும் பல அரசு பள்ளிகள் ஆங்கில வழிக் கல்வியை துவங்க ஆர்வத்துடன் முன்வந்துள்ளன. அதனையேற்ற பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், ஒன்றாம் வகுப்பு, 6 மற்றும் 9ம் வகுப்புகளில் ஒவ்வொரு வகுப்புகளிலும் குறைந்த பட்சம் 15 மாணவர்கள் சேர்க்கை இருந்தால், அப்பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை துவங்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "இரண்டாம் ஆண்டாக அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை துவங்க பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து அந்தந்த பள்ளிகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை, அந்தந்த பள்ளிகளே அச்சிட்டு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது' என்றார். 
விழிப்புணர்வு தேவை 
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்ட போதிலும், பெற்றோர் மத்தியில் போதிய அளவு விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால், ஆங்கில வழிக் கல்வியில் மாணவர் சேர்க்கை குறைவாகவே உள்ளது. இதனை தவிர்த்திடமுதல் கட்டமாக ஆங்கில வழிக் கல்வி குறித்து பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Ad Code

Responsive Advertisement