Ad Code

Responsive Advertisement

ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளி கல்வித்துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன்

கோடை விடுமுறைக்குப் பிறகு அனைத்துப் பள்ளிகளும் திட்டமிட்டபடி ஜூன் 2-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் கூறினார்.


கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பது சில நாள்கள் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், திட்டமிட்டவாறு பள்ளிகளை ஜூன் 2-ஆம் தேதியே திறக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

பள்ளி கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 23-ஆம் தேதியிலிருந்தும், தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு மே 1-ஆம் தேதியிலிருந்தும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

4.2 கோடி புத்தகங்கள்: பள்ளிகள் திறக்கும் நாளான ஜூன் 2-ஆம் தேதியே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.  1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சேர்த்து 4.2 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முதல் பருவத்துக்காக 2.2 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 2 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

இதில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகங்கள் மட்டும் சில மாவட்டங்களில் போதிய அளவில் இல்லை என தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்துக்கு தகவல்கள் வந்தன.

இதையடுத்து, அந்த மாவட்டங்களுக்கான கூடுதல் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்தப் புத்தகங்கள் அனைத்தும் சனிக்கிழமை மாலைக்குள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தனியார் பள்ளிகளுக்கான புத்தகங்கள் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் மூலம் 22 வட்டார விற்பனைக் கிடங்குகளிலிருந்து நேரடியாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. வரும் ஜூன் 2-ஆம் தேதிக்குள் இந்தப் புத்தகங்களும் முழுமையாக விநியோகிக்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் 57 லட்சம் பேரும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 33 லட்சம் பேரும் உள்ளனர்.

இவர்களுக்கான இலவச புத்தகங்கள், சீருடை விநியோகத்தைக் கண்காணிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பள்ளி கல்வி இணை இயக்குநர் அளவிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement